பதிவு செய்த நாள்
12
செப்
2024
05:09
தேவாரம்; தேனி மாவட்டம் தேவாரம் அருகே க.புதுப்பட்டியில் கி.பி., 10, 11 ம் நூற்றாண்டை சேர்ந்த இந்திரன் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
போடி சி.பி.ஏ., கல்லூரி முதல்வர் சிவக்குமார் வழிகாட்டுதலில் பேராசிரியர் மாணிக்கராஜ் தொல்லியல் கள ஆய்வு செய்து வருகிறார். க.புதுப்பட்டியைச் சேர்ந்த ஜெகதீஷ்குமார், முபிம் தகவலின்படி உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி முன்னாள் பேராசிரியர் வர்கீஸ் ஜெயராஜ், ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சிவப்பிரகாசம் ஆகியோருடன் இணைந்து தேவாரம் அருகே க.புதுப்பட்டியில் கள ஆய்வு நடந்தது. இதில் 5 அடி உயரம், ஒரு அடி அகலம் உள்ள கி.பி., 10, 11 ம் நூற்றாண்டை சேர்ந்த இந்திரன் சிற்பம் கண்டறியப்பட்டது. பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது : க.புதுப்பட்டி கிழக்கே உள்ள வயல் வெளியில் முற்கால பாண்டியர் கால கட்டட பாணியில் கட்டப்பட்ட நீல கண்டேஸ்வரர் கோயில் உள்ளது. அருகே உள்ள மரத்தின் அடியில் 5 அடி உயரம் ஒரு அடி அகலம் உடைய கல்லில் தேவலோகத்தின் அரசனும், மருத நிலத்தின் கடவுளுமான இந்திரனின் சிற்பம் உள்ளது. இந்திரன் தன் வாகனமான வெள்ளை யானையின் மீது ராஜலீலாசனம் எனும் அமர்வில் உள்ள காட்சி புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டு இருக்கிறது. நான்கு கைகள் உள்ள இந்திரன் சிற்பத்தில் முன் வலது கையில் அங்குஜம் பிடித்தும், யானையின் தலையில் ஊன்றிய படியும், பின் இடது கையில் யானையின் மீது வைத்துள்ளது. பின் இடது கையில் பிடிக்கப்பட்ட ஆயுதம் தெளிவு இன்றி உள்ளதால் அடையாளம் காண முடியவில்லை.
இந்திரனுக்கு தலையில் கரண்ட மகுடம் வடிவமைக்கப்பட்டு இரு பக்கமும் வெண் சாமரம், யானையின் பின் பக்கம் வெண் கொற்றக்குடையும் உள்ளது. இந்திரன் சிற்றின்பத்திற்காக பூலோகத்தில் பன்றியாகப் பிறவி எடுத்து, அழகான பெண் பன்றியை மணந்து பூலோகத்தில் தங்கி விட்டார். இந்திரன் நிலை கண்டு வருந்திய தேவர்கள் பன்றிகளை கொன்று, பின்னர் பன்றி உருவில் இருக்கும் இந்திரனையும் கொன்று தேவலோகம் அழைத்து சென்றனர் என்ற புராணக் கதையின் படி இக்கல்லின் கீழ் பகுதியில் பன்றியும், புலியும் ஒன்றை ஒன்று எதிர்த்து நின்று சண்டை செய்ய தயார் நிலையில் இருப்பது போன்ற காட்சியை புடைப்பு சிற்பமாக வெட்டி காட்சிப் படுத்தப்பட்டு இருக்கிறது. கல் மேல் பகுதியில் சூரியன், சந்திரன் உருவங்கள் வெட்டப்பட்டுள்ளன என்றார்.