பதிவு செய்த நாள்
12
செப்
2024
05:09
மாமல்லபுரம்; மேல்மருவத்துாரில் உள்ள சித்தர் பீட ஆதிபராசக்தி கோவில், பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. பங்காரு அடிகளார் இக்கோவிலை நிறுவி, பக்தர்களுக்கு நீண்டகாலமாக அருளாசி வழங்கி வந்தார். கடந்த ஆண்டு அக்., 19ம் தேதி மறைந்தார். கோவிலில், அவரது கற்சிலையை நிறுவ, ஆதிபராசக்தி சித்தர் பீட நிர்வாகத்தினர் முடிவெடுத்தனர். அதற்காக, மாமல்லபுரம், பகிங்ஹாம் கால்வாய்க்கரை சாலையில் உள்ள சிற்பக்கூடத்தில், கற்சிலை வடிக்க, மூன்று மாதங்களுக்கு முன் ஆர்டர் வழங்கப்பட்டது. தமிழக அரசின் கலைச்செம்மல் விருதுபெற்ற சிற்பக்கலைஞர் முருகன் மேற்பார்வையில், பங்காரு அடிகளார் அமர்ந்த நிலையில், இரண்டு கைகளை உயர்த்தி அருளாசி வழங்கும் தோற்றத்தில், களிமண்ணால் ஆன மாதிரி சிற்பம் வடிக்கப்பட்டது. பங்காரு அடிகளார் மனைவி லட்சுமி உள்ளிட்ட குடும்பத்தினர் பார்வையிட்டு, அதே தோற்றத்தில் கற்சிலை வடிக்க கூறினர். கடந்த இரண்டு மாதங்களாக, சிலை வடிக்கப்பட்டு, தற்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம், 1 டன் எடை என்ற அளவில், இச்சிலை வடிக்கப்பட்டுள்ளது. சிலையை நிறுவ, தனி பீடமும் உண்டு. கடந்த 9ம் தேதி, இச்சிலையை சித்தர் பீட இணை தலைவர் லட்சுமி பார்வையிட்டார். சில நாட்களில் மேல்மருவத்துாருக்கு கொண்டு செல்லப்பட்டு, கோவிலில் நிறுவப்பட உள்ளது.