பதிவு செய்த நாள்
13
செப்
2024
03:09
பாலக்காடு; ஓணம் பண்டிகையையொட்டி குருவாயூர் கோவிலில் தரிசன நேரம் மேலும் ஒரு மணி நேரம் கூட்ட தேவஸ்தான நிர்வாக குழு தீர்மானித்துள்ளனர்.
கேரளாவில் ஓணம் பண்டிகை நாளை முதல் மூன்று நாட்கள் கொண்டாட உள்ளன. இந்த நிலையில் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் பண்டிகையையொட்டி நாளை (14ம் தேதி) முதல் 22ம் தேதி வரை தரிசன நேரம் மேலும் ஒரு மணி நேரம் கூட்ட தேவஸ்தான நிர்வாக குழு கூட்டம் தீர்மானித்துள்ளனர்.
இது குறித்து தேவஸ்தான நிர்வாக குழு உறுப்பினர் கூறுகையில்: ஓணம் பண்டிகையையொட்டி கோவிலில் தரிசனம் நேரம் மேலும் ஒரு மணி நேரம் கூட்ட தீர்மானித்துள்ளோம். கோவில் நடை பிற்பகல் 3:30 மணிக்கு திறக்கும். ஓணம் பண்டிகையையொட்டி உத்திராடம் நாளான நாளை காலை "காழ்ச்சக்குலை சமர்ப்பணம் என்ற அழைக்கப்படும் பக்தர்கள் மூலவருக்கு காணிக்கையாக நேந்திரன் பழ கொத்து சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கும். பண்டிகை நாட்களில் அன்றாட நிகழ்ச்சிகளை தவிர சிறப்பு காழ்சீவேலி என்ற அழைக்கும் செண்டை மேளம் முழங்க யானை மீது உற்சவர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். திருவோணம் நாளான 15ம் தேதி பத்தாயிரம் பேருக்கு ஓண சத்தியா என அழைக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்படும். காளன், ஓலன், பப்படம், சாம்பார், பழம் பாயசம், மோர், நேந்திரன் சிப்ஸ், ஊறுகாய், புளியிஞ்சி உட்பட உள்ள உணவு வகைகள் அன்னதானத்தில் இருக்கும். அண்ண லட்சுமி மண்டபத்திலும் அதன் அருகே அமைத்த பந்தலிலும் அன்னதானம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.