பதிவு செய்த நாள்
16
செப்
2024
11:09
மாமல்லபுரம்; ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில், மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் கோவில் பிரசித்திபெற்றது. பல நுாற்றாண்டுகள் பழமையானது.
அத்துறையின் ஆளவந்தார் அறக்கட்டளை, இக்கோவிலை நிர்வகிக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கோவில் சீரழிந்த நிலையில், வழிபாடின்றி இருந்தது. சிவபெருமான் வழிபாடு கருதி, பக்தர்களே புனரமைத்து, கடந்த 2004ல் மஹா கும்பாபிஷேகம் நடத்தி, வழிபாடு துவக்கப்பட்டது. 13 ஆண்டுகள் கடந்து, 2017ல், மீண்டும் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், நுழைவாயிலில் கருங்கல் ராஜகோபுரம் உள்ளிட்ட திருப்பணிகளை, நந்திகேஸ்வரர் பிரதோஷ குழுவினர், பக்தர்கள் நன்கொடை வாயிலாக மேற்கொண்டனர். பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த 12ம் தேதி மங்கள இசை, விநாயகர், மல்லிகேஸ்வரர், மல்லிகேஸ்வரி உள்ளிட்ட சுவாமிய அனுக்ஞை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட கும்பாபிஷேக சடங்குகள் துவங்கின. தொடர்ந்து, 13ம் தேதி முதல்கால யாகபூஜை துவங்கி, நேற்று நான்காம் கால யாகபூஜை முடிந்தது. நேற்று காலை 7:45 மணிக்கு, சுவாமியர் சன்னிதிகள், ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு, மந்திர முழக்கத்துடன் புனித நீரூற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 10:30 மணிக்கு, சுவாமியருக்கு மஹா அபிஷேகம் நடந்தது. மாலை சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடந்து, வீதியுலா சென்றனர். அதேபோல், திருப்போரூர் அடுத்த முள்ளிப்பாக்கம் ஞானாம்பிகை உடனுறை பரசுராமேஸ்வரர் கோவில், காயார் கிராமத்தில் உள்ள கருணாம்பிகை உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தையூர் மரகதாம்பிகை உடனுறை முருகீஸ்வரர் கோவில்களிலும், நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.