பதிவு செய்த நாள்
16
செப்
2024
11:09
மாமல்லபுரம்; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருக்கழுக்குன்றம் வட்டார பகுதியில், செப்., 7ம் தேதி, 121 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கடந்த ஒரு வாரமாக, அவற்றுக்கு வழிபாடு நடத்தப்பட்டது.
மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம் ஆகிய பகுதிகளில், ஹிந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பக்தர்கள், நேற்று கடலில் சிலைகளை விஜர்சனம் செய்தனர். செங்கல்பட்டு பகுதி விநாயகர் சிலைகளும், இங்கு விஜர்சனம் செய்யப்பட்டன. லாரி, டிராக்டர், வேன் ஆகியவற்றில், மேள முழக்கத்துடன் சிலைகளை கொண்டு சென்று, கடற்கரையில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு, கடலில் கரைத்தனர். போலீசார், தன்னார்வலர்கள் பாதுகாப்புக்கு நின்று, கடலில் எவரையும் குளிக்க விடாமல் தடுத்தனர். மாமல்லபுரத்தில், மாலை 5:00 மணி வரை, 160 சிலைகள் கரைக்கப்பட்டன. கூடுவாஞ்சேரி, காயரம்பேடு, பெருமாட்டுநல்லுார், ஊரப்பாக்கம், ஆதனுார், மாடம்பாக்கம், மூலக்கழனி, மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த, 44 சிலைகள், நேற்று பாலவாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டன. கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், தாம்பரம், சேலையூர் வழியாக, பாலவாக்கம் கடற்கரைக்கு சிலைகள் அனைத்தும் சென்றன. கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ராஜிவ் பிரின்ஸ் ஆரோன், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.