மார்கழி போல் புண்ணிய மிக்க புரட்டாசி மாத பிறப்பு; மகா விஷ்ணுவை வணங்கி சகல நன்மைகளும் பெறுவோம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2024 10:09
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்," என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் நடக்கும் மாதமாக விளங்குகிறது. பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பு என்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இந்த மாதத்தை "எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும். ஓம் நமோ நாராயணா என்றாலே நலமும் வளமும் சேரும்!