பதிவு செய்த நாள்
18
செப்
2024
11:09
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர். நேற்று அரசு விடுமுறை, முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை, புரட்டாசி மாதம் முதல் நாள் மற்றும் பவுர்ணமி ஆகியவற்றால், வழக்கத்திற்கு மாறாக அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். மலைக்கோவில் தேர்வீதியில் கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் பொதுவழியில் மூலவரை தரிசிக்க, நீண்ட வரிசையில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதே போல் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கும், மாலை 5:00 மணிக்கும் மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு தங்கத்தேரில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.