திருப்பூர்; திருப்பூர் ஓம்சக்தி கோவிலில், 38 ம் ஆண்டு ஆடிப்பூர விழா கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஓம் சக்தி கோவில், திருப்பூரில் உள்ளது. ஆண்டுதோறும், ஆடிப்பூரம் விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, 38 ம் ஆண்டு ஆடிப்பூர விழா, நேற்று முன்தினம் துவங்கியது. முளைப்பாரி மற்றும் பூவோடு ஊர்வலமாக எடுத்துவந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. நேற்று காலை, சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து, கஞ்சிகலய ஊர்வலம் நடந்தது. கருப்பாயன் கோவிலில் இருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள், கஞ்சிகலயம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தை, எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் துவக்கி வைத்தனர். கஞ்சி வார்ப்பை தொடர்ந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பக்தர்கள், கருவறைக்குள் சென்று, தங்கள் கையால் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். மாலையில், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை, சிறப்பு அலங்காரபூஜையும், தொண்டர்களுக்கு திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.