பதிவு செய்த நாள்
21
நவ
2012
11:11
தென்காசி: தென்காசி பகுதி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.தென்காசி தென்பழனியாண்டவர் கோயிலில் கடந்த 13ம் தேதி கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. விழாவின் இறுதி நாளன்று திருக்கல்யாணம் நடந்தது. அன்று காலையில் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு தென் பழனியாண்டவர் ராஜ அலங்காரத்திலும் ஆறுமுக நயினார், வள்ளி, தெய்வானை வெள்ளி கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் மண்டபத்திற்கு எழுந்தருளினர். சுவாமி, அம்பாள் மணமக்களாக அலங்காரம் செய்யப்பட்டனர். வைதீக முறைப்படி சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. மாலை மாற்று வைபவம், பட்டு, அங்கவஸ்திரம் மாற்றும் வைபவம், சிறப்பு தீபாராதனை நடந்தது. மூலவருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இலஞ்சி குமாரர் கோயில்: இலஞ்சி குமாரர் கோயிலில் கடந்த 13ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்தார். மேலும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. 18ம் தேதி மாலையில் சுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. மறுநாள் காலையில் மூலவருக்கு முழுக்காப்பு தீபாராதனை நடந்தது.இரவு கோயில் மண்டபத்தில் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளம் முழங்க தெய்வானை திருமணம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பல்லக்கில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.விழாவின் 8ம் நாளான நேற்று காலையில் முழுக்காப்பு தீபாராதனை, இரவு ஊஞ்சல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் இறுதி நாளான இன்று (21ம் தேதி) காலையில் தீர்த்தவாரி நடக்கிறது.
கல்லிடைக்குறிச்சி: கல்லிடைக்குறிச்சி சுப்பிரமணியசுவாமி கோயிலில் 13ம் தேதி கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. 18ம் தேதி மாலையில் ரதவீதியில் சூரசம்ஹாரம் நடந்தது. மறுநாள் காலையில் அம்பாள் ரதவீதி செல்வ விநாயகர் கோயிலில் எழுந்தருளினார். மாலையில் ரதவீதியில் சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்த தபசு காட்சி நடந்தது.இரவு கோயிலில் வேத பாராயணத்துடன் திருக்கல்யாணம் நடந்தது. திருமண கோலத்தில் சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுப்பிரமணியபட்டர், மூர்த்தி பட்டர், பிச்சுமணி பட்டர், உலகநாத பட்டர் திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.