பதிவு செய்த நாள்
01
அக்
2024
11:10
கருமத்தம்பட்டி; நவராத்திரியை ஒட்டி கொலு பொம்மைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. வரும், அக்., 3 ம்தேதி நவராத்திரி விழா துவங்குகிறது. கோவில்கள், வீடுகளில், படிகள் அமைத்து, கொலு பொம்மைகள் வைத்து, 10 நாட்களும் லட்சுமி, சரஸ்வதி, துர்கா பூஜைகள் செய்து பெண்கள் வழிபாடு நடத்துவர். கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடக்கும். இந்நிலையில், கருமத்தம்பட்டி பகுதியில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. பாரம்பரியமாக மண் பொம்மைகள் உற்பத்தி செய்து வரும் சிவசாமி கூறுகையில்," இன்னும் இரு நாட்களில் நவராத்திரி விழா துவங்க உள்ளது. அதனால், பல்வேறு வகையான பொம்மைகளை தயாரித்து வருகிறோம். கடவுள் உருவங்கள், தச அவதாரங்கள், ஆன்மீக சான்றோர், கல்யாண செட், கிரிக்கெட் அணி செட், மற்றும் உயிரினங்கள், காய்,கனிகள் உள்ளிட்ட பொம்மைகள் தயாரித்துள்ளோம். தற்போது வண்ணம் தீட்டும் நடக்கிறது. அது முடிந்ததும் பொம்மை விற்பனையை துவங்குவோம்," என்றார்.