பதிவு செய்த நாள்
03
அக்
2024
10:10
புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையை அடுத்த பிரதமை முதல் 9 நாட்களுக்கு செய்யப்படும் நவராத்திரி எனப்படும் தேவிவழிபாடு மிகச்சிறப்பானது. இதில் 3 நாட்களில் ஆதிபராசக்தியை துர்க்கையாகவும், அடுத்த 3 நாட்களுக்கு லட்சுமியாகவும், அதற்கடுத்த 3 நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறார்கள்.
நவ என்ற சொல்லுக்கு புதியது என்றும், ஒன்பது என்றும் இரு விதமான பொருள்கள் உண்டு. உத்தராயண காலத்தின் (தை ஆனி) நடுவில் வருவது வசந்த ருது (சித்திரை). தட்சிணாயண காலத்தின் (ஆடி மார்கழி) நடுவில் வருவது சரத் ருது (புரட்டாசி). இவ்விரு பருவகாலங்களும் எமதர்மனின் இரு கோரைப்பற்களைக் குறிக்கும் என்று தேவி பாகவதம் சொல்கிறது. இக்காலங்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை. அவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க வசந்த நவராத்திரியை, ராமநவமியை ஒட்டி ஒன்பது நாட்களும், சாரதா நவராத்திரி எனப்படும் சரஸ்வதி பூஜையை ஒன்பது நாட்களும் கொண்டாடுகிறோம். இக்காலத்தில் நம்மை எமனிடம் இருந்து தாயுள்ளத்தோடு காப்பாற்றுபவள் அம்பிகை என்பதால், அவளை வழிபாடு செய்யும் வழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருக்கிறார் கள். மேற்கு வங்காளத்தில் இந்த பூஜையை காளிபூஜை, துர்க்கா பூஜை என்கின்றனர். மைசூருவில் தசரா என்றபெயரில் இவ்விழா சிறப்பாக நடக் கிறது. முப்பெரும் சக்திகளான மலைமகள், அலைமகள், கலைமகள் என்ற முப்பெருந்தேவியருக்கும் மூன்று தினங்கள் வீதம் ஒன்பது நாட்கள் பூஜை செய்யப்படுகிறது. நவராத்திரி நாட்களில் பக்தி சிரத்தையோடு, அம்பாளை வழிபட, அம்பிகை அருளால் வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெறுவர்.