பதிவு செய்த நாள்
05
அக்
2024
12:10
மேட்டுப்பாளையம்; சிறுமுகை அருகே உள்ள அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, 1008 ஜாங்கிரியால் விசேஷ சிறப்பு பூஜைகள் நடந்தன.
சிறுமுகை அடுத்த பொகலூர் அருகே தாளத்துறை டி.ஆர்.எஸ்., ஹைவே சிட்டி குடியிருப்பு பகுதியில், அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இன்று புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறந்து, சுப்ரபாதத்துடன் விழா துவங்கியது. ஸ்தபந திருமஞ்சனம், சுதர்ஸன ஹோமம் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டன. அடுத்து ஆஞ்சநேயருக்கு, புதிய வஸ்த்ரம் மற்றும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1008 ஜாங்கிரியால் சுவாமிக்கு அலங்காரம் செய்தனர். இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா மற்றும் பூஜை ஏற்பாடுகளை தாஸன் ரிஷி பட்டர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.