பதிவு செய்த நாள்
07
அக்
2024
10:10
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து, திருப்பதி திருமலை கோவில் புரட்டாசி பிரம்மோற்சவ ஐந்தாம் நாளில் ஏழுமலையானுக்கு அணிவிக்க, ஆண்டாள் சூடி களைந்த மாலை, கிளி, பட்டு, மங்கள பொருட்கள் நேற்று கொண்டு செல்லப்பட்டன. இதை முன்னிட்டு, நேற்று மதியம் 2:00 மணிக்கு கோவில் வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு மாலை, கிளி, பட்டு சாற்றி மங்களப் பொருட்களை சமர்ப்பித்து சிறப்பு பூஜைகளை, கோபி பட்டர் செய்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் ஆண்டாள் சூடி களைந்த மாலை, கிளி, பட்டு, மங்களப் பொருட்களை புதிய வெள்ளிக் கூடையில் வைத்து ஸ்தானிகர் கிருஷ்ணன் தலைமையில் மாடவீதி சுற்றி வந்து, திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டன. விழாவில் அறங்காவலர் நளாயினி, ராம்கோ இயக்குனர் ஸ்ரீகண்டன்ராஜா, செயல் அலுவலர் சக்கரையம்மாள், வேதபிரான் சுதர்சன், கோவில் பட்டர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் அறங்காவலர்கள், கோவில் பட்டர்கள் செய்தனர். இன்று காலை, திருமலை ஜீயர் மடத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு, திருவீதி சுற்றி வந்து கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது. நாளை காலை பெருமாளுக்கும், மாலையில் மலையப்பசாமிக்கும் ஆண்டாள் மாலை சாற்றி கருடசேவை நடக்கிறது.