பதிவு செய்த நாள்
14
அக்
2024
12:10
திருவனந்தபுரம்: மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின்போது, சபரிமலையில், உடனடி தரிசனத்துக்கான டிக்கெட்கள் வழங்கப்படாது. அதே நேரத்தில் அனைவருக்கும் தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படும், என, கேரள தேவஸ்வம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு; கேரளாவின் சபரிமலையில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதையடுத்து, ஆன்லைன் வாயிலாக தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்தாண்டு அனுமதிக்கப்படுவர் என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு, எதிர்க்கட்சியான பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல், சபரிமலைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இது தொடர்பாக, கேரள அரசின் தேவஸ்வம் அமைச்சர் வி.என்.வாசவன் நேற்று கூறியுள்ளதாவது: கூட்ட நெரிசலை சமாளிக்கவும், ஒழுங்குபடுத்தவும், ஆன்லைன் வாயிலாக தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இந்தாண்டு மண்டல பூஜை காலத்தின்போது, நாளொன்றுக்கு, 80,000 பேரை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வாய்ப்பு; சபரிமலைக்கு வந்து, தரிசனம் செய்வதற்கு உடனடி டிக்கெட் பெறும் திட்டம் இருக்காது. அதே நேரத்தில், குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்களை பதிவு செய்யலாம். விரதம் இருந்து சபரிமலைக்கு வருவோர், அய்யப்பனை தரிசனம் செய்யாமல் செல்ல மாட்டார்கள். அனைவருக்கும் தரிசனம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.