பதிவு செய்த நாள்
14
அக்
2024
03:10
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஆயுத பூஜை விஜயதசமி மற்றும் நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் அதிகாலை, 5:30 மணி முதலே, மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பொது வழி தரிசனத்தில், 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், தேர்வீதியில் நீண்ட வரிசையில் பக்தர்கள் மூலவரை தரிசிக்க காத்திருந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருக பெருமான் தங்கத்தேரில் எழுந்தருளி தேர்வீதியில் வலம் வந்து அருள்பாலித்தார். இதே போல 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்தனர். நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.