பதிவு செய்த நாள்
15
அக்
2024
01:10
ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தன்மை, மகத்துவம் இருக்கும் என்பது ஐதீகம். சில கடவுள்கள், சாந்த சொரூபியாக இருப்பர்; சில கடவுள்கள், உக்ரமானதாக காணப் படுவர். பைந்துாரில் குடிகொண்டுள்ள சோமேஸ்வரர் உக்ரமானவர். இதை பக்தர்கள் உணர்ந்துள்ளனர். தட்சிண கன்னடா, மங்களூரில் இருந்து உத்தரகன்னடாவின் முருடேஸ்வரா அல்லது கோகர்ணாவுக்கு செல்லும் போதும், முருடேஸ்வராவில் இருந்து மங்களூருக்கு செல்லும் போதும் பைந்துார் என்ற ஊரை தாண்டித்தான் செல்ல வேண்டும். இது உடுப்பி மாவட்டத்தில் உள்ளது. கடற்கரையில், இயற்கையின் மடியில் அமைந்து எப்போதும் பசுமையுடன் காணப்படும் ஊராகும்.
கடற்கரை: பைந்துார் சிவனின் அனுகிரகம் பெற்றுள்ளது. பரசுராமனின் பாதுகாப்புள்ள ஊர் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாகும். பைந்துாரில் சோமேஸ்வரர் கோவில் உள்ளது. சோமேஸ்வரா என்பது சிவனின் பெயர். கோவிலை பார்க்கும்போது, ஆச்சரியம் ஏற்படாமல் இருக்காது. ஏனென்றால் இதுவும் கூட, முருடேஸ்வரரை போன்று, கடற்கரையில் அமைந்துள்ளது. வரலாற்று பின்னணி உள்ள புராதன கோவிலாகும். கோவிலுக்கு வந்து சிவனை தரிசித்தால், பக்தர்களின் விருப்பங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். குறிப்பாக திங்கட்கிழமை தரிசிப்பது, மிகவும் சிறப்பானது. திங்கட்கிழமை, பிரதோஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடக்கும். அப்போது உற்சவ மூர்த்தி வீதி உலா நடைபெறும். மழை பெய்யா விட்டால், ஊர் மக்கள் சோமேஸ்வரர் கோவிலுக்கு வந்து, வேண்டுதல் வைத்து இளநீர் அபிஷேகம் செய்தால், மழை பெய்யும். அதேபோன்று அதிகமான மழை பெய்து தொந்தரவு ஏற்பட்டால், கோவிலுக்கு வந்து சிறப்பு பிரார்த்தனை செய்தால், மழை நீற்கும் என்பதும் மக்களின் நம்பிக்கை.
திருமண வரம்; புதுமண தம்பதியர், இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து பூஜித்தால், தாம்பத்ய வாழ்க்கை சுகமாக அமையும். திருமணம் தாமதமானால் கோவிலுக்கு வந்து வேண்டினால், திருமண வரம் கிடைக்குமாம். ஊரில் நல்லது நடந்தால், அது சிவனின் அனுகிரகம் என, மக்கள் நம்புகின்றனர். ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தாலும், அதற்கு சிவனின் கோபமே காரணம் என்கின்றனர். கடற்கரையில் நின்று சோமேஸ்வரரை தரிசிக்கலாம். கோவிலை ஒட்டியுள்ள மலையில் மண் சரிவு ஏற்பட்டது. சோமேஸ்வரர் கோவிலில் நாகர் கடவுள் நிலை நின்றுள்ள திருத்தலமாகும். ஆனால், இங்கு நாகங்கள் சரியான முறையில் கவுரவிக்கப்படுவது இல்லை. இதுவே நிலச்சரிவுக்கு காரணம் என, ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர். இப்பகுதியில் ரயில் சுரங்கப்பாதை அமைக்க முற்பட்டபோது, அசம்பாவிதம் ஏற்பட்டது. நிலச்சரிவு போன்ற அசம்பாவிதங்களுக்கு சிவனின் கோபமே காரணம் என நம்பப்படுகிறது. கோவிலில் குடிகொண்ட கடவுளுக்கு, சோமேஸ்வரர் என்ற பெயர் உள்ளதால், இங்குள்ள கடற்கரையை, ‘சோமேஸ்வரா கடற்கரை’ என, அழைக்கின்றனர்.
சொர்க்கலோகம்; கோகர்ணாவை தவிர மேற்கு முகமாக அமைந்துள்ள ஒரே கோவில் சோமேஸ்வரா. சூரிய அஸ்தமனத்தின்போது, சூரிய வெளிச்சம், நேரடியாக சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதை பார்க்க அதிர்ஷ்டம் வேண்டும். அந்த நேரத்தில் சிவலிங்கம் சொர்க்க லோகத்தில் இருந்து தரையிறங்கி வந்ததை போன்று காட்சி அளிக்கும். கோவில் வளாகத்தில் சிறிய நந்தி, கணபதி, ஆஞ்சனேயர் விக்ரகங்கள், துளசி மாடம், நவகிரகங்கள் உள்ளன. கோவிலில் இருந்து சிறிது கீழ் நோக்கிச் சென்றால், நாக தீர்த்தம், நாகர் சன்னிதியை தரிசிக்கலாம். வெளிப்புறத்தில் சில கல்வெட்டுகள் உள்ளன. இவைகள் கோவில் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. கோவில் பக்கத்தில் உள்ள பாறை மீது, இனிப்பு நீருற்று நிரந்தரமாக பாய்கிறது. இந்த நீர் பாறைகளுக்குள் நுழைந்து, அரபிக்கடலில் கலக்கிறது. இதை காணும்போது, கடல் அலைகள் சிவனின் பாதங்களை தழுவுவதை போன்று தோன்றுகிறது. சீதையை மீட்க இலங்கைக்கு தன் படையுடன் புறப்பட்ட ராமர், சோமேஸ்வரர் அமைந்துள்ள இடத்தில் ஓய்வெடுத்து சென்றதாக ஐதீகம். சிவனை தரிசனம் செய்ததன் அடையாளமாக, சோமேஸ்வரர் கோவில் கட்டப்பட்டதாக, புராணங்கள் கூறுகின்றன. அனைத்து பருவ காலங்களிலும், நாக தீர்த்தத்தில் நீர் இருக்கும்.
காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை, சிவனை தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. பெங்களூரு, மைசூரு உட்பட முக்கிய மநகரங்களில் இருந்து, பைந்துாருக்கு அரசு பஸ், தனியார் வாகன வசதிகள் உள்ளன. ரயில் வசதியும் உள்ளது.