பதிவு செய்த நாள்
15
அக்
2024
01:10
சென்னை; திருச்செந்துாரில், 48 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, புதிய பக்தர்கள் தங்கும் விடுதியை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 48.3 கோடி ரூபாயில், புதிதாக பக்தர்கள் தங்கும் விடுதி கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. மேலும், 10 கோடி ரூபாயில் முடி காணிக்கை மண்டபம்; ஆறு கோடி ரூபாயில் சுகாதார வளாகங்கள்; 4 கோடி ரூபாயில், 7.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய நீர்தேக்க தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் ஆகியவையும் கட்டப்பட்டு உள்ளது. இவற்றிற்கு மொத்தமாக, 68.3 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட கட்டடங்களை, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அடிக்கல்; திருசெந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோவிலில், 5.81 கோடி ரூபாயில் தெப்பகுளம் சீரமைப்பு, வேதபாடசாலை, கருணை இல்லம், புதிய அன்னதான கூடம், சரவண பொய்கையில் செயற்கை நீரூற்றுகள், அழகிய பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். தலைமை செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, துாத்துக்குடி எம்.பி., கனிமொழி, தலைமை செயலர் முருகானந்தம், அறநிலையத்துறை செயலர் சந்தரமோகன், ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்செந்துாரில் இருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், துாத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.