கோவில்பட்டி; கோவில்பட்டி, செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் ஐப்பசி திருக் கல்யாண திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, வரும் 26ம் தேதி நடக்கிறது.
இக் கோயிலில், ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. நேற்று கொடியேற்றத்தையொட்டி, காலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 10:15 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இரவு 7:29 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. தினமும், காலை, மாலை வேளைகளில் பல்லக்கு, காமதேனு, சிம்ம, ரிஷப, அன்ன வாகனங்களில் அம்மன் வீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, 9ம் நாள் (26ம் தேதி) நடக்கிறது. அன்று காலை 5:00 மணிக்கு மேல் 5:30க்குள் ரதாரோகணம், காலை 8:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர், தேர் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதி உலா வருகிறது. கொடியேற்ற விழாவில், அறநிலையத்துறை கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையாளர் கமலா, அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, அறங்காவலர்கள் திருப்பதிராஜா, ரவீந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இந்துமதி, மாவட்ட பஞ்., துணை சேர்மன் மகாலட்சுமி சந்திரசேகர், முன்னாள் அ.தி.மு.க., வக்கீல் பிரிவு செயலாளர் சிவபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.