பதிவு செய்த நாள்
04
நவ
2024
10:11
சென்னை; ‘‘ஆன்மிக தத்துவங்களை கற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லாதவர்கள், ஸ்ரீஆதிசங்கரரின் கிரந்தங்களை படித்தால் போதும். குருவின் வழிகாட்டுதல் கிடைக்கப் பெறாதவர்கள், ஸ்ரீஆதிசங்கரரின் வரலாற்றையும், அவர் இயற்றிய ஸ்லோகங்களையும் படித்தாலே போதும்,’’ என, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள் அருளாசி வழங்கினார். சென்னை வந்துள்ள சிருங்கேரி சன்னிதானம், அக்., 28 முதல், மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சுதர்மா இல்லத்தில் தங்கி, விஜய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8:15 மணிக்கு, சென்னை அபிராமபுரத்தில் உள்ள ஸ்ரீசங்கரா குருகுலத்திற்கு வருகை தந்தார். குருகுலத்தை சுற்றிப் பார்த்த அவர், அங்குள்ள கோவிலில் வழிபட்டார்.
பின், பக்தர்களிடையே அவர் வழங்கிய அருளுரை: தேதியூர் சுப்பிரமணிய சாஸ்திரி, தன் வாழ்க்கை முழுதும் ஸ்ரீஆதி சங்கரரின் அத்வைத தத்துவத்தையும், வேதாந்த கருத்து களையும்மக்களிடம் பிரசாரம் செய்தார். இன்று பலர் வேதாந்த பிரசாரம் செய்வதற்கு தேதியூர் சாஸ்திரிகளே காரணம். நம் நாட்டில் அனைத்து கோவில்களிலும் ஸ்ரீஆதிசங்கரர் சன்னிதி இருக்க வேண்டும். அனைவரது வீடுகளிலும் ஸ்ரீஆதிசங்கரர் படம் இருக்க வேண்டும். ஸ்ரீஆதிசங்கரர் இயற்றிய ஸ்தோத்திரங்கள், கிரந்தங்களை படித்தாலே நமக்கு கடவுளின் அருள் கிடக்கும். ஆன்மிக தத்துவங்களை கற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லாத சூழலில் இருப்பவர்கள், ஸ்ரீஆதிசங்கரரின் கிரந்தங்களை படித்தாலே போதுமானது. ஸ்ரீஆதிசங்கரர் தான் இயற்றிய கிரந்தங்கள் அனைத்திலும், அத்வைத தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். எனவே குருவின் வழிகாட்டுதல்கிடைக்கப் பெறாதவர்கள், ஸ்ரீஆதிசங்கரரின் வரலாற்றையும், அவர் இயற்றிய ஸ்லோகங்களையும் படிக்க வேண்டும். ஸ்ரீஆதிசங்கரர் ஜெயந்தியை அனைவரும் கொண்டாட வேண்டும். அவரது தத்துவங்களை பிரசாரம் செய்ய வேண்டும். கோவிலுக்கு வந்திருப்பவர்களிடம் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டால், கஷ்டம் தீர வேண்டும்; ஞானம் கிடைக்க வேண்டும்; செல்வம் வேண்டும் என, பலவாறு பதில் சொல்வார்கள். சிலர், கடவுளை தரிசிக்க மட்டுமே வந்தேன் என்பார்கள். தேவையில்லாத போதும், கஷ்டங்கள் இல்லாதபோதும் கடவுளை வணங்க வேண்டும். துயரங்கள் வரும்போது மட்டும் கடவுளை தேடிச்செல்வது சரியல்ல. எப்போதும் நமக்கு கடவுள் அருள் வேண்டும். இதை அனைவரும் உணர வேண்டும். சங்கர ஜெயந்தி போன்ற நல்ல செயல்கள் நடந்தால், யாரும் கூப்பிடாமல் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் நமக்கு ஒரு வேலையை கடவுள் கொடுப்பார். இவ்வாறு சன்னிதானம் அருளுரை வழங்கினார்.
ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி கோவிலில் சிருங்கேரி சன்னிதானம் தரிசனம்சென்னை, கொத்தவால்சாவடியில் உள்ள ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி கோவிலில், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள், நேற்று காலை தரிசனம் செய்தார். ஏழாவது நாளாக நேற்று, சுதர்மா இல்லத்தில், பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். நேற்று காலை, 9:00 மணி அளவில், சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள ஸ்ரீசாரதா பீடத்திற்கு விஜயம் செய்தார். பழமை வாய்ந்த மடத்தை பார்வையிட்ட அவர், அங்கு நிர்வாகிகளிடம், மடத்தின் வரலாறு, செயல்பாடுகள் குறித்து உரையாடினார்.பின், கொத்தவால்சாவடியில் உள்ள ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி கோவிலுக்கு வருகை தந்த சன்னிதானத்திற்கு, கோவில் நிர்வாகம் சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்குள்ள பசுவை வழிபட்ட அவர், அதற்கு உணவளித்து மகிழ்ந்தார். அதைத் தொடர்ந்து, ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி கோவில் சன்னிதி சென்று வழிபட்டார்.பின், அங்கு திரண்டிருந்த பக்தர்களிடம், தெலுங்கு மொழியில் அருளுரை வழங்கிய சன்னிதானம் வழங்கிய அருளாசி:ஸ்ரீஆதிசங்கரரால் நிறுவப்பட்ட நான்கு மடங்களில் முதன்மையானது சிருங்கேரி மடம். ஜார்ஜ் டவுனில் உள்ள ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி தேவஸ்தானத்திற்கும், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்திற்கும், 200 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய தொடர்பு உள்ளது. ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி கோவிலுக்கு அருகில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம், மிகவும் பழமை வாய்ந்தது. மடத்தின் 32வது பீடாதிபதி ஸ்ரீநரசிம்ம பாரதீ சுவாமிகளால் நிறுவப்பட்டது. ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி தேவஸ்தான அறங்காவலர் குழு, ஆன்மிக மற்றும் சேவை பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் அருளாசி வழங்கினார்.