பதிவு செய்த நாள்
04
நவ
2024
10:11
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று காலை இரண்டாம் பிரகாரத்தில் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. காப்பு கட்டிய வீரபாகு சிவாச்சாரியார் தலைமையில் வேதவிற்பன்னர்கள் பூஜையை நடத்தினர். அப்போது முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்க்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், கோவில் தக்கார் அருள்முருகன், அறநிலையத்துறை இணை கமிஷனர் ஞானசேகரன் ஆகியோர் பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழா முக்கியமானதாகும். கந்த சஷ்டி திருவிழாவின் போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி விரதம் இருப்பர். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா நேற்று முன் தினம் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. அதிகாலை 1:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. காலை 6:00 மணிக்கு ஜெயந்திநாதப் பெருமான் யாகசாலை பூஜைக்கு எழுந்தளினார். காலை 7:00 மணிக்கு யாசாலை பூஜை துவங்கியது. நண்பகல் 12:00 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடத்தப்பட்டது. மதியம் 12:45 மணிக்கு தங்கச் சப்பரத்தில் ஜெயந்திநாதர் யாகசாலை பூஜையில் இருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, கிரிபிரகாரத்தில் தங்கத்தேர் உலா நடத்தப்பட்டது. கந்த சஷ்டி விழா துவங்கியதைத் தொடர்ந்து, கோவில் முன் ஏராளமான பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தனர். அதிகாலையிலேயே பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை உடை அணிந்து தங்களது விரதத்தை துவக்கினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 7ம் தேதி மாலை கடற்கரையில் நடக்கிறது. பல லட்சம் பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்பர் என்பதால், பக்தர்கள் தங்குவதற்கு 18 தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 181 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டாயிரம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நவ. 8ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்துாருக்கு 70 சிறப்பு பஸ்களும், திருநெல்வேலி, கோவில்பட்டி, நாகர்கோவில் பகுதிகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.