பதிவு செய்த நாள்
07
நவ
2024
02:11
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி தேர் திருவிழாவுக்கு இன்று கொடியேற்றப்பட்டது.
கேரள மாநிலம், பாலக்காட்டில் கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு தேர் இன்று நேற்று காலை, 7:30 மணிக்கு துவங்கியது. வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வேத பாராயணம் ஆகியவை நடந்தது. காலை, 11:34 மணிக்கு சிவ சிவ சங்கர ஹர ஹர சங்கர , "கைலாசபதை ஆகிய கோஷங்கள் முழங்க கோவில் மேல்சாந்தி பிரபு சேனாபதியின் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. விழா நடக்கும் உப கோவில்களான, மந்தக்கரை மகா கணபதி கோவிலில் குமார் சிவாச்சாரியார் தலைமையிலும் பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ராமமூர்த்தி பட்டாச்சாரியார் தலைமையிலும் சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவிலில் ஸ்ரீகாந்த் பட்டாச்சார்யார் தலைமையிலும் கொடியேற்றம் நடந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் கலாச்சாரத் துறையின் ஒத்துழைப்புடன் ஐந்து நாட்களில் நடக்கும் சங்கீத உற்சவத்தை நேற்று மாலை 6:00 மணிக்கு சாத்தபுரம் மணி அய்யர் சாலையில் மாவட்ட கலெக்டர் சித்ரா துவக்கி வைத்தார். வரும், 13, 14, 15 தேதிகளின், திருத்தேரோட்டம் நடத்தப்படுகிறது. திருவிழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான "ரத சங்கமம் , வரும் 15ம் தேதி மாலை நடக்கிறது. அன்று பாலக்காடு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அளித்து, பாலக்காடு மாவட்ட கலெக்டர் சித்ரா உத்தரவிட்டுள்ளார்.