பதிவு செய்த நாள்
24
நவ
2012
02:11
ஓலைச் சுவடிகள், கல்வெட்டு மூலம்தான் பெரும்பாலும் அந்த கால புராணங்களை படித்திருப்போம். பார்க்க வேண்டுமானால், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோவில், ராமநாதபுரம் அரண்மனை, போடி அரண்மனைக்கு பயணிக்க வேண்டும். அங்கு வரையப்பட்டுள்ள மூலிகை ஓவியங்கள், இன்றும் வரலாற்று சாட்சிகளாக உள்ளன. இதில், மதுரை அழகர் கோயில் மண்டபத்தில் திருமலை நாயக்கர், ராமாயண ஓவியங்களையும், ராமநாதபுரம் அரண்மனையில் பாகவத ராமாயணங்களையும் வரைந்துள்ளனர். ராமநாதபுரத்தில், ராமன் சீதை திருமணத்துடன் நிறைவு பெற்று விடுகிறது. ராமாயணம் முழுமையும் போடி அரண்மனையில் மூலிகையால் வரையப்பட்ட ஓவியங்களாக காட்சியளிக்கின்றன. ராமாயணம் முழுவதும் மூலிகையால் வரையப்பட்டு, ஒவியத்தின் மேல் விளக்க குறிப்புகள், பேச்சுத்தமிழில் எழுதப்பட்டுள்ளன. சில இடங்களில் கருப்பு, வெள்ளை வண்ணத்தின் மீது ஓவியங்களை வரைந்துள்ளனர். ஓலைச்சுவடி மரபை பின்பற்றி மெய்யெழுத்துக்களின் மீது புள்ளி இல்லை. நூற்றாண்டுகளாக அழியா ஓவியங்களாக காட்சியளிக்கின்றன.
சரி, ஓவிய வரலாற்றை பார்த்தாச்சு. இனி, அரண்மனையை பார்ப்போம்... மதுரை நாயக்கர் அரசு தோன்றுவதற்கு முன்பே, போடிப்பகுதியில், குறுநில மன்னர்களால் போடி அரண்மனை உருவாக்கப்பட்டது. மதுரையில் விசுவநாதநாயக்கர், நாயக்கர் அரசை நிறுவி நிர்வாக வசதிக்காக 72 பாளையப்பட்டுகளாக உருவாக்கும் போது, போடி நாயக்கனூரும் 72 பாளையப்பட்டுகளுள் ஒன்றாக இணைத்து கொண்டதால், போடி பாளையக்காரர்கள் என்றழைக்கப்பட்டனர். போடி அரண்மனை மூன்று மாடிகளுடன், பெரிய சுற்றுச்சுவர் கொண்டது. கோதா என்னும் விளையாட்டரங்கம், உக்கிராணம் எனும் பொருள் வைப்பறை, நெற்களஞ்சியம், பார்வையாளர் மண்டபம், குதிரை, யானை கொட்டம், லட்சுமி விலாசம் அடங்கிய கலைக்கூடமாக போடி அரண்மனை திகழ்கிறது. லட்சுமி விலாசம், தர்பார் ஹால் என்ற இரண்டு சுவர்களிலும் புகழ்பெறும் வகையில் அரிய வகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. லட்சுமி விலாசம் பகுதியில் போடி பாளையக்காரர்களின் குல தெய்வமாகிய வடமலை நாச்சியம்மன்னை, எட்டு கைகளுடன் கூடிய அஷ்டலட்சுமியாக ஓவியத்தில் வரைந்துள்ளனர். ஆண்டுக்கொரு முறை ஓவிய வடிவில் உள்ள அன்னைக்கு வழிபாடு நடக்கிறது. கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறையினர், மற்றும் ஓவியங்கள் பற்றி படிக்கும் மாணவர்கள், வெளிநாட்டு பயணிகளும் இங்கு வருகின்றனர்.