பதிவு செய்த நாள்
11
நவ
2024
10:11
அவிநாசி: தமிழ்நாடு கோவம்ச ஆண்டிப்பண்டாரத்தார் சமூக முன்னேற்ற நல சங்கம் சார்பில் முப்பெரும் விழா, அவிநாசி குலாலர் திருமண மண்டபம் மற்றும் கோவம்ச திருமண மண்டபத்தில் நடந்தது. மாநில தலைவர் பிரகாசம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் செல்வன் வரவேற்றார். பொருளாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். பண்ணவாடி ஆதீனம் டாக்டர் வெங்கடேஸ்வர சுவாமிகள் ஆசி வழங்கினார்.
தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் சமுதாயக் கூட்டமைப்பு தலைவர் ரத்தினசபாபதி, தமிழ்நாடு சிவ குலத்தோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கணேசன், முனைவர் ஞானப்பூங்கோதை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆண்டிப்பண்டாரம், பண்டாரம் ஆகியன ஒரே ஜாதி. தமிழக அரசு எம்.பி.சி., பிரிவில் உள்ள ஆண்டிப்பண்டாரம் என்பதை மாற்றி பண்டாரம் என திருத்தம் செய்து எம்.பி.சி., பிரிவில் தொடர வேண்டும். எம்.பி.சி., பிரிவிற்கு ஒதுக்கிய 20 சதவீத இட ஒதுக்கீட்டை எவ்வித உள் ஒதுக்கீடு இல்லாமல் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும். கோவில்களில் பூஜை செய்து வரும் பண்டாரம் சமுதாயத்திற்கு மன்னர்களால் கொடுக்கப்பட்ட நிலத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அல்லாமல், பண்டாரம் சமுதாயத்திற்கு சார்ந்தது என ஆவணமாக்க வேண்டும். தொல்லியல் துறை ஆய்வாளர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார், நாதஸ்வரம் வித்வான் காருக்குறிச்சி அருணாச்சலம் ஆகியோர் நினைவு மண்டபத்தை புதுப்பித்து, இவர்களது நினைவு நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும். முன்னதாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக மண்டபத்திற்கு வந்தனர்.