மயிலாடுதுறை வதானியேஸ்வரர் கோவிலில் யானை மீது உலா வந்த தேவாரம் திருவாசகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2024 11:11
மயிலாடுதுறை ; துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை வதானியேஸ்வரர் கோவிலில் தேவாரம் திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகளை யானை மீது ஏற்றி ஊர்வலம், வீடுகள்தோறும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி நடைபெற்று வரும் ஐப்பசி துலா உற்சவம் கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது இதனை முன்னிட்டு தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதானியேஸ்வரர் கோவிலில் நான்காம் நாள் திருவிழாவில் யானை மீதேற்றி திருமுறை வீதியுலா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதையொட்டி, வதானேஸ்வரர் கோவிலில் இருந்து தேவாரம், திருவாசகம் ஆகிய திருமுறைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த யானையின் மீது திருமுறைகளை ஏற்றி, தருமபுரம் ஆதீன தேவார பாடசாலை மாணவர்கள் திருமுறைகளை வாசித்தவாறு செல்ல, கோயிலின் நான்கு வீதிகளின் வழியே திருவீதியுலா நடைபெற்றது. பொதுமக்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன கட்டளை தம்புரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.