பதிவு செய்த நாள்
13
நவ
2024
04:11
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ் பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் திருமண மண்டபம் கட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 5 கோடியே 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருமண மண்டபம் கட்டுவதிற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், உதவி ஆணையர் தனசேகரன், தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன், தி.மு.க மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், கணக்கம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருமண மண்டபம் 26 சென்ட் இடத்தில், கீழ் தளத்தில் உணவு கூடம், முதல் தளத்தில் 300 பேர் அமரக்கூடிய வகையில் திருமணகூடம், லிஃப்ட் மற்றும் பார்க்கிங் வசதியுடன் கட்டப்படுகிறது. 18 மாதத்தில் கட்டட பணி முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். என அதிகாரிகள் தெரிவித்தனர்.