பதிவு செய்த நாள்
14
நவ
2024
10:11
சபரிமலை: கார்த்திகை முதல் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பூஜை சபரிமலையில் மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பூஜைகளின் நிறைவாக 41 வது நாள் மண்டல பூஜை நடைபெறும், இதற்காக சபரிமலை நடை நாளை மாலை 5:00 மணிக்கு திறக்கப்படும். மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றி கோவிலை வலம் வந்து 18 படிகள் வழியாக கீழே இறங்கி ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்ப்பார். தொடர்ந்து அங்கு காத்திருக்கும் அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கான புதிய மேல் சாந்திகள் சபரிமலை - அருண்குமார் நம்பூதிரி, மாளிகைப்புறம் - வாசுதேவன் நம்பூதிரி ஆகியோரை கை பிடித்து அழைத்து சன்னிதி முன் அழைத்து வருவார். தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு புதிய மேல் சாந்திகளுக்கு அபிஷேகம் நடத்துவார். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நவ.16 அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி அய்யப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி, நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து பூஜைகள் தொடங்கும். மண்டல சீசனில் தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். ஸ்பாட் புக்கிங் கவுண்டர் பம்பையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை பக்தர்களுக்கு; உதவ ஏ.ஐ., சாட்பாட்சபரிமலை பக்தர்களுக்கு உதவும் வகையில் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் சாட்பாட் வசதியை கேரள அரசு உருவாக்கி உள்ளது. இதற்கான இலச்சினையை, மாநில முதல்வர் பினராயி விஜயன் நேற்று வெளியிட்டார்.சாட்பாட் என்பது மனிதர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதிலளித்து தீர்வு அளிக்கக்கூடிய ஒரு மென்பொருள். இதை, நம் மொபைல்போன் வாயிலாகவும் இயக்கலாம். தற்போது, பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் உருவாக்கியுள்ள சுவாமி சாட்பாட் தளம், மலையாளம் தவிர தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகளில் பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த தளத்தில், சபரிமலை கோவிலில் மேற்கொள்ளப்படும் பூஜைகள், அருகில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி முழு விபரங்களையும் பக்தர்கள் அறிந்து கொள்ளலாம்.
பம்பை வரை அனுமதி; கடந்த ஆண்டு நிலக்கலில் பார்க்கிங் கிரவுண்ட் நிரம்பி வழிந்ததால் நிலக்கலிருந்து பத்தனம்திட்டா வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 24 மணி நேரம் வரை பக்தர்கள் நடு காடுகளில் சிக்கித் தவித்தனர். இதனால் சிறிய வாகனங்களை பம்பையில் பார்க்கிங் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தேவசம் போர்டு கேரள உயர் நீதிமன்றத்தில் கோரியது. கேரளா அரசு போக்குவரத்து போக்குவரத்து கழகம் எதிர்த்தது.பம்பை ஹில்டாப் மற்றும் சக்குப்பாலம் பகுதிகளில், பக்தர்களின் சிறிய வாகனங்களை பார்க்கிங் செய்ய அனுமதித்து நீதிபதிகள் அனில் நரேந்திரன், முரளிகிருஷ்ணா உத்தரவிட்டுள்ளனர்.இந்த உத்தரவை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.நடை திறக்க ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேற்று பம்பையில் முகாமிட்டிருந்தனர். இவர்கள் சன்னிதானத்திற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் நாளை மதியத்துக்கு பின் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடுக்கி கலெக்டர் அலுவலகம், மஞ்சுமலை கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவற்றில் 24 மணி நேரம் செயல் படும் வகையில் கட்டுப்பாட்டு அறை காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும் உதவி மையம் ஆகியவை நவ.16 முதல் பயன்பாட்டுக்கு வரும் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இடுக்கி கலெக்டர் அலுவலகத்தில் (தொலைபேசி எண் 04862 - 232 242) பொறுப்பு அதிகாரி கூடுதல் மாவட்ட நீதிபதி ஷைஜூ பி.ஜேக்கப் (அலை பேசி எண் 94463 03036), மஞ்சுமலை கிராம நிர்வாக அலுவலக பொறுப்பு அதிகாரி பீர்மேடு தாசில்தார் (அலைபேசி எண் 94470 23597), உதவி மையம் (மஞ்சுமலை கிராம நிர்வாக அலுவலகம் 04869- 224 243, 85476 12909) ஆகியோர் தலைமையிலான குழுவை தொடர்பு கொண்டு பக்தர்கள் பயன்பெறலாம்.