பதிவு செய்த நாள்
14
நவ
2024
06:11
அபிஷேகப் பிரியரான ஈஸ்வரனை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி திருநாள் அன்று, ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு உரிய பொருட்களால் வழிபடுவது விசேஷம். சித்திரையில் மருக்கொழுந்து, வைகாசியில் சந்தனம், ஆனி மாதத்தில் காராம் பசுவின் பால், ஆவணியில் வெல்லம், புரட்டாசியில் கோதுமை மற்றும் பசு நெய் கலந்த வெல்ல அப்பம், கார்த்திகை மாதத்தில் பசு நெய் மற்றும் தாமரை தீபம், தை மாதத்தில் கருப்பஞ் சாறு, மார்கழியில் பசு நெய் மற்றும் நறுமண பன்னீர் சமர்ப்பித்து வழிபடுவார்கள். அதேபோல், ஐப்பசி மாதத்தில் அன்னத்தால் ஈஸ்வரனை வழிபடுவது சிறப்பு. அன்னம் பரப்பிரம்ம சொரூபம் என்பார்கள். அதாவது, அன்னம் வேறு, ஆண்டவன் வேறு அல்ல. இதையே சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாதர் என்றும் சொல்வது உண்டு.
‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று பெரியவர்கள் சொல்லி வைத்தனர். அளவாகச் சாப்பிட்டால் உடலில் வியாதிகள் அணுகாது. ஆரோக்கியம் நிலைத்திருக்கும்.‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழலாம். அன்னத்தை வீணாக்கக்கூடாது, அது தெய்வசொரூபம் என்பதை மக்களுக்கு உணர்த்தவே அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
“சோறுகண்ட இடம் சொர்க்கம்” என ஒரு பழமொழி உண்டு. அதற்குப் பலர் பல விதமான அர்த்தங்களைக் கூறுவர். ஆனால் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? சிவன் கோயில்களில் நடத்தப்படும் அன்னாபிஷேகத்தைக் காண்பவருக்கு சொர்க்கம் என்பதே சிறந்தது. சரியும் கூட. ஒவ்வொரு அரிசியும் லிங்கம்போல இருப்பதால் அத்தனை கோடி லிங்கங்களைத் தரிசித்த புண்யமும் நமக்கு உண்டு. ஆக அவ்வளவு உயர்ந்தது அன்னாபிஷேகம். மாமன்னன் ராஜராஜ சோழன் தான் பெற்ற வெற்றியின் நிமித்தம் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியபோது சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்ய ஆரம்பித்தான். மிகப்பெரிய லிங்கமான அதற்கு அன்னாபிஷேகம் செய்வது எளிதல்ல. இருந்தும் அதனைத் தன் கடமையாக ஏற்றுச் செய்தான். அடுத்து இவருடைய மகன் ராஜேந்திரனும், தன்னுடைய ஆட்சியில் பெரிய வெற்றி பெற்ற போது அதனைக் கொண்டாட, கங்கை கொண்ட சோழபுரத்தில் தஞ்சை போன்றே ஒரு பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினான். தந்தையைப் போலவே, மகனும் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்து வந்தான். காலங்கள் கடந்தன... அந்தப் பழக்கம் அறவே நின்று போனது.... இது சார்ந்த தகவல்கள், காஞ்சி மகாபெரியவர் சந்திரசேகரஸ்வாமிகளுக்குத் தெரிய வந்த போது, தானே முன்னின்று ஒரு கமிட்டியை அமைத்து, அன்னாபிஷேகத்தைத் தொடர ஏற்பாடு செய்தார்.... இந்தச் சிறந்த பணி இன்று வரை செவ்வனே தொடருகிறது.