பதிவு செய்த நாள்
26
நவ
2024
10:11
திருப்புவனம்; தமிழகம் கோயில்களின் நகரமாக திகழ்கிறது என நீண்ட தூர சைக்கிள் பயணம் மேற்கொண்டதாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ராஜஸ்தான் இளைஞர் பாபு ராம் சௌத்திரி 24, தெரிவித்துள்ளார். மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலை வழியாக தினசரி உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பலரும் சென்று வருகின்றனர்.
தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் பலரும் இப்பாதை வழியாக ராமேஸ்வரம் சென்று வருகின்றனர். நேற்று மதியம் ராமேஸ்வரத்தில் இருந்து சைக்கிளில் தேசிய கொடி கட்டி இளைஞர் ஒருவர் திருப்புவனம் வழியாக நான்கு வழிச்சாலையில் சென்றார். பொதுமக்கள் பலரும் அவரை வரவேற்று வாழ்த்தி அனுப்பினர். அவரிடம் கேட்டபோது : ராஜஸ்தான் மாநிலம் நாக்கூர் என்ற இடத்தைச் சேர்ந்தவன். இந்தியாவில் நீண்ட தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளேன், சிறுவயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு வருகிறேன், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நாடு முழுவதும் அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற மரங்களை வளர்க்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். கடந்த 2023 ஏப்ரலில் தொடங்கிய பயணம் பஞ்சாப், ஹரியானா, உத்ரகாண்ட், ஹிமாச்சலபிரதேசம், டெல்லி, உத்தரப்பிரதேசம் கோவா, கர்நாடகா வழியாக தமிழகம் வந்துள்ளேன், தமிழகம் கோயில்களின் மாநிலமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கோயில்கள், ராமேஸ்வரத்தில் தரிசனம் முடித்து விட்டு மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க செல்கிறேன், நாள் ஒன்றுக்கு 70கி.மீ., தூரம் வரை பயணம் செய்கிறேன், 2026 ல் எனது பயணம் நிறைவு பெறும் போது 60 ஆயிரம் கி.மீ., தூரத்தை கடந்திருப்பேன், வழி நெடுகிலும் பல்வேறு மாநில மக்களை சந்தித்து பேசியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் இட்லி,தோசை மிகவும் பிடித்துள்ளது, என்றார்.