தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரகம் கடல் நீரில் மூழ்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2024 10:11
தேவிபட்டினம்; வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் கடல் நீர்மட்டம் உயர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரங்கள் நீரில் மூழ்கியதால் தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் கடல் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலாப்பயணிகளும் அதிகம் வந்து செல்கின்றனர். சில நாட்களாக வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு கடற்கரை கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுவதால் அவ்வப்போது நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் நவபாஷாணத்தில் உள்ள ஒன்பது நவக்கிரகங்களும் கடல்நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பக்தர்கள் நவக்கிரகங்களை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது.