பதிவு செய்த நாள்
01
டிச
2024
10:12
கோவை; லோக்சபா தேர்தல் முடிந்தவுடன் கோவை மக்களின் குரலாக உருவாக்கப்பட்ட, ‘வாய்ஸ் ஆப் கோவை’ அமைப்பு சார்பில் ‘விழித்திரு, எழுந்திரு, உறுதியாக இரு’ என்ற தலைப்பிலான ‘ஏ3’ (அவேக், அரைஸ், அசெர்ட்) மாநாடு கோவை, அவிநாசி ரோடு, ‘கொடிசியா–இ’ ஹாலில் நேற்று துவங்கியது.
மாநாட்டை, காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்து பேசியதாவது: கோப, தாபங்களை குறைக்கக் கூடியது, நிவர்த்தி செய்யக்கூடியது தர்மம். தர்மத்தை பொறுத்தவரை சுயகட்டுப்பாட்டை போதிக்க வேண்டும். அதற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும். பிரார்த்தனை செய்வதால் பல பலன்களை பெற முடியும். கோபங்களை தவிர்ப்பதற்கு பல்வேறு செயல்முறைகள் தர்மத்தில் சொல்லப்படுகின்றன. தர்மம், வாய்மை, துாய்மை, தாய்மையை வலியுறுத்துகிறது.
நீர் என்பது ‘அமிர்தம்’ என்கிறோம். நீர் நிலைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். துாய்மை இந்தியா என்று தற்போது பிரசாரம் செய்யப்படுகிறது. துாய்மையையும்,சேவை மார்க்கத்தையும் தர்மம் வலியுறுத்துகிறது. தர்ம சிந்தனைகளை இளைஞர்களிடம் வளர்க்க வேண்டும். பசு பாதுகாப்பு, மரம் நடுதல், நல்ல பூமி, நீர், அக்னி, காற்று, ஆகாயம் பக்தியை மட்டும் சொல்வது தர்மம் அல்ல. உலக வாழ்வில் வியாபாரம் உள்ளிட்டவற்றிலும் தர்மத்தை உணர்த்தி, கணித்து, கவனித்து சொன்னது தர்மம். பல்வேறு சதுர்வேதி மந்திரங்கள் இடம்பெற்ற பூமியில், தர்மத்தை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
‘சனாதன தர்மத்தின் அறிமுகம்’ என்ற தலைப்பில் ஸ்வாமினி சத்வித்யானந்தா சரஸ்வதி பேசியதாவது: சனாதனம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிவதில்லை. ஆன்மிகவாதிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாகவே புரிந்து கொண்டுள்ளனர். வேதங்கள் அறிவியல் பூர்வமானவை. வேதத்தில் இருந்து நாம் எதை அறிந்து கொள்கிறோமோ, அதை வேறு எந்த ஒரு விஷயத்தின் வாயிலாகவும் கற்றுக்கொள்ள முடியாது. வேதங்கள் தான் சனாதன தர்மம். நம் சனாதன அறிவை நாம் வாழ்வில் பயன்படுத்த வேண்டும். பள்ளிகளில் உள்ள கல்வி முறை மாற்றப்பட வேண்டும். சனாதன தர்மம் அனைத்தையும் தருகிறது. பாரதம் என்பதே சரியானது. சனாதன தர்மம் என்பது வாழ்க்கை முறை. ஹிந்துக்கள் அனைவரும் சனாதன தர்மத்தை பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
‘சாஸ்திரங்கள் நம் கலாசாரத்தை உணர்த்தும்’; ‘நம்முடைய வரலாறு எங்கே ஆரம்பிக்கிறது’ என்ற தலைப்பில் ஆராய்ச்சியாளர் ஜெயஸ்ரீ சாரநாதன் பேசியதாவது:நாம் யார் என்பதை, 19ம் நுாற்றாண்டில் வெள்ளையர்கள் கூறியுள்ளனர். அதுவே, இன்று வரை பின்பற்றப்படுகிறது. இது உண்மையல்ல. ஆர்யன் என்றால் சிறந்த பண்புகளை கொண்டவர் என்பது அர்த்தம். பல்வேறு ஆராய்ச்சிகள் நம் வரலாற்றை கூறுகின்றன. மகாபாரதத்தில் தோற்றவர்கள், வணிகர்களாக மாறியுள்ளனர். ஆராய்ச்சிகளே இன்று நம் பாரம்பரியத்தை மெய்ப்பிக்கின்றன. மகாபாரதத்தில் உள்ள பல விஷயங்கள் இன்றும் நம்மிடம் உள்ளது. அறிவியல் பூர்வமாக பார்ப்பதை விட, நம் சாஸ்திரங்கள் வாயிலாக பார்த்தால் மட்டுமே நம் கலாசாரம் புரியும்.இவ்வாறு, அவர் பேசினார்.
பிளவுபடுத்திய ஆங்கிலேயர்; தமிழ் கலாசாரம்–6,000 ஆண்டுகள்’ என்ற தலைப்பில் கேரள மாநில முன்னாள் டி.ஜி.பி., அலெக்சாண்டர் ஜேக்கப் பேசியதாவது:இந்தியாவை அடிமையாக்கி ஆண்டவர்கள் ஆங்கிலேயர்கள். மதம், ஜாதிகளை புதிதாக உருவாக்கி மனிதர்களிடையே பிரிவினையை துாண்டினர். கடந்த, 1,881ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய ஆங்கிலேயர், நாட்டில், 7,462 ஜாதிகளாக பிரித்து, மக்களிடையே ஏற்ற, இறக்கத்தை ஏற்படுத்தினர். மதம், ஜாதி அடிப்படையில் சனாதன தர்மத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். வட இந்தியர்கள் ஆரியர்கள், தென் இந்தியர்கள் திராவிடர்கள் எனக்கூறி, இணைய விடாமல் செய்தனர். ஜாதி பிரிவினை இந்தியாவை பிளவுபடுத்தியது.ஆங்கிலேயர் நாட்டை விட்டு சென்ற பிறகு பாகிஸ்தான், இலங்கை என பல நாடுகள் மதத்தின் அடிப்படையில் உருவாகின. ஆனால், இந்தியாவில் மட்டும் ஹிந்துக்கள் மட்டுமின்றி இதர மதத்தினரும் வாழ்கின்றனர். பல மொழிகளுக்கு தமிழ் மூலக்கூறாக உள்ளது. பாரத மாதா நம்மை ஒன்றாக இணைத்துள்ளார்.இவ்வாறு, அவர் பேசினார்.