பதிவு செய்த நாள்
02
டிச
2024
12:12
சென்னை; திருவண்ணாமலை யோகி பகவான் ராம்சுரத்குமாரின், 106வது ஜெயந்தி விழாவில், எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய பாடல்களை பக்தர்கள் பாடி, பரவசத்துடன் வணங்கினர். கடந்த 1918 டிச., 1ல் பிறந்தவர் ராம் சுரத்குமார். சிறுவயதிலேயே ஆன்மிக நாட்டம் கொண்ட இவர், ஞானம் பெற்று, திருவண்ணாமலையில் துறவியாக வாழ்ந்தார்.
எளியவராக வாழ்ந்த இவரின் பார்வையிலேயே, தன் கஷ்டங்களை தொலைத்தவர்கள் ஏராளம். ‘விசிறி சாமியார்’ என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டார். இவரின் சீடர்களில் ஒருவரான எழுத்தாளர் பாலகுமாரன், ‘விசிறி சாமியார், பகவான்யோகி ராம்சுரத்குமார்’ போன்ற நுால்களை எழுதி உள்ளார். மேலும், அவர் அடைந்த பரவச அனுபவங்களை, பாடல்களாகவும் எழுதி உள்ளார். பகவான் யோகி ராம் சுரத்குமாரின், 106வது ஜெயந்தி விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை, பாலகுமாரன் இல்லத்தில், ‘அகண்ட நாமம்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. நேற்று திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில், ஜெயந்தி விழா நடந்தது. இதை, எழுத்தாளர் பாலகுமாரன் அறக்கட்டளையும், மயிலை யோகி ராம் சுரத்குமார் சத்சங்கமும் இணைந்து நடத்தின. மழையையும் பொருட்படுத்தாமல், யோகியின் பக்தர்களில், 300க்கும் மேற்பட்டோர் கூடினர். காலை, 9:00 மணிக்கே, சென்னை முனீஸ்வர சாஸ்திரிகள், யோகி ராம் சுரத்குமாரின் உருவச்சிலைக்கு ஹோமம், அபிஷேகங்களை நடத்தினார். அதைத்தொடர்ந்து, மயிலை யோகி ராம்சுரத்குமார் சத் சங்கத்தினர், வேத பாராயணம் நிகழ்ச்சியிலும், நாம சங்கீர்த்தனத்திலும் பங்கேற்றனர். அப்போது, எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய, 30க்கும் மேற்பட்ட பாடல்களை, ராகத்துடன் பாடிய அவர்கள், தங்களுக்கு யோகி ராம் சுரத்குமாருடன் ஏற்பட்ட பரவச அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாலையில் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, ‘எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.