பதிவு செய்த நாள்
05
டிச
2024
01:12
மயிலாடுதுறை; திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரூ 3 கோடி மதிப்பிலான புதிய வெள்ளித் தேரின் வெள்ளோட்டத்தை ஆதீனங்கள் முன்னிலையில் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால், அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கு வந்து சுவாமி அம்பாளை தரிசித்தால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் சென்னை தொழிலதிபர் ஜெயராமன் ஐயர் மற்றும் பக்தர்களின் பங்களிப்புடன் ரூ 3 கோடி மதிப்பில் புதிய வெள்ளித்தேர் செய்து முடிக்கப்பட்டு அதன் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை ரத பிரதிஷ்டை ஹோமம் நடந்தது. தொடர்ந்து வெள்ளி ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் அபிராமி அம்மன் எழுந்தருள செய்து ரத விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், மதுரை ஆதீனம் 293 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், தொண்டை மண்டலம் ஆதீனம் 234 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிதம்பரநாதர் ஞான பிரகாச தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள், திண்டுக்கல் ஸ்ரீ சிவபுரா ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமார்த்த சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெள்ளி ரத வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆதீன குருமகா சன்னிதானங்கள் மற்றும் அமைச்சர், எம்பி., எம்எல்ஏ உள்ளிட்டோர் வெள்ளி ரதத்தை வடம் பிடித்து இழுக்க கோவில் பிரகாரத்தை வலம் வந்து நிலையை அடைந்தது. இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்பி. சுதா, பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தருமபுரம் ஆதீன கோவில்கள் தலைமை கண்காணிப்பாளர் மணி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.