பதிவு செய்த நாள்
05
டிச
2024
05:12
சபரிமலை; மண்டல மகர விளக்கு காலத்தில் சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு மூன்று நாட்களை தவிர்த்தால் முழுமையாக முடிவடைந்துள்ளது. இதனால் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுக்கு அலை மோதுகின்றனர்.
சபரிமலை தரிசனம் விருச்சுவல் கியூ என்ற ஆன்லைன் மூலம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங்கில் 10 ஆயிரம் பேரும் தினமும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் முன்பதிவை 80 ஆயிரமாக அதிகரிக்க கேரள உயர்நீதிமன்றம் கூறியும், தேவசம்போர்டு அமல்படுத்தாமல் உள்ளது. ஆன்லைன் முன்பதிவில் 80 ஆயிரம்,ஸ்பாட் புக்கிங் கில் பத்தாயிரத்துக்கு மேல் வரும் பட்சத்தில் படி ஏறுவதற்கான கியூ மர கூட்டத்தை தாண்டும் என்பதால் தேவசம்போர்டு முடிவெடுக்காமல் உள்ளது.
மண்டல - மகர விளக்கு காலத்தில் 17, 18, 19 தேதிகளை தவிர்த்தால் மீதமுள்ள அனைத்து நாட்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. மண்டல காலம் நேர் பாதி மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் மகர விளக்கு காலத்துக்கான விருச்சுவல் கியூ முன்பதிவும் முடிந்துள்ளதால் பக்தர்கள் தரிசன டிக்கெட் கிடைக்காமல் அலை மோதுகின்றனர். ஆனால் இருமுடி கட்டுடன் வரும் எந்த பக்தரும் திரும்பி செல்ல மாட்டார்கள் என்று தேவசம்போர்டு உறுதியாக கூறுகிறது. இதற்காக எருமேலி மற்றும் பம்பையில் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களை அதிகரிப்பது பற்றி தேவசம்போர்டு ஆலோசித்து வருகிறது. பம்பையில் ஆறு கவுண்டர்கள் மட்டுமே உள்ள நிலையில் இதை 10 ஆக அதிகரிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியுள்ளார். நடப்பு சீசனில் மொத்தம் 14 லட்சம் பக்தர்கள் தரிசனம் நடத்தியதில் 2 லட்சம் பேர் ஸ்பாட் புக்கிங்கில் பதிவு செய்து வந்தவர்கள் . ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களில் தினமும் 8 முதல் 10 ஆயிரம் பேர் வரை வராமல் உள்ளனர். இவர்கள் தங்கள் பயணத் திட்டத்தை மாற்றியவுடன் முன்பதிவை ரத்து செய்தால் வேறு பக்தர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று தேவசம்போர்டு பலமுறை எடுத்துக் கூறியும் பக்தர்கள் அதை செய்யாதது கவலை அளிக்கிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 70 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரமாக அதிகரிக்கும் திட்டம் தற்போது இல்லை என்று தேவசம்போர்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.