பதிவு செய்த நாள்
07
டிச
2024
08:12
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வெள்ளி பிரார்த்தனை உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அதில், பக்தர்கள் காணிக்கை செலுத்தி சுவாமியை தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கொண்டாடப்படும் தீப திருவிழா, ஒவ்வொரு நாள் நடக்கும் விழாவும், ஒவ்வொரு உபயதாரர் மற்றும் கட்டளைதாரரால், காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வருமானம் கிடைக்காத காலத்தில், தீப திருவிழா நடத்த செலவிற்காக கோவில் நிர்வாகம் சார்பில், நகரின் முக்கிய பிரமுகர்களுக்கு பத்திரிகை வைத்து அழைத்து, காணிக்கை செலுத்த கோருவது வழக்கம். அதன்படி கோவில் நிர்வாகம் சார்பில், திருவிழாவில் மூன்றாம் நாளில், கோவில் வளாகத்தில் வெள்ளி காணிக்கை உண்டியல் வைப்பது வழக்கம். அதில், நகர முக்கிய பிரமுகர்கள் வந்து தீப திருவிழா செலவிற்காக காணிக்கை செலுத்துவர். அதன்படி பழமை மாறாமல் இருக்க, நேற்று கோவில் வளாகத்தில் வெள்ளி உண்டியல் வைக்கப்பட்டது. நகரின் முக்கிய பிரமுகர்கள் அதில் காணிக்கை செலுத்தினர்.