பதிவு செய்த நாள்
12
டிச
2024
12:12
தமிழகத்தில், கொங்கு நாடு வரலாற்றுச்சிறப்புடையது. கொங்கு நாடு தமிழகத்தின் மேற்கு பகுதியாக விளங்குகிறது.வடக்கு எல்லை தலைமலை, தெற்கு எல்லை வைகாவூர் என வழங்கப்படும் பழநி. மேற்கு எல்லை வெள்ளிமலை (வெள்ளியங்கிரி), கிழக்கு எல்லை குளித்தலையாகும்.
இன்றைக்கும் காங்கயத்துக்கு அடுத்த படியூரில் கிடைக்கும் வண்ண கற்களுக்காக கிறிஸ்து சகாப்தத்தின் முன்னரே, ரோமானியர்கள் கொங்கு நாட்டில் வலம் வந்தனர்.கொங்கு நாடு முழுவதும் கிடைக்கும் பழமையான அவர்களது காசுகளாலும், ஏனைய தகவல்களை கொண்டு உண்மை என விளங்குகிறது. சேர நாட்டில் இருந்து மூன்று பெருவழிகள் கொங்கு நாட்டின் வழியாக செல்கின்றன.ஒரு வழி, பேரூர், அவிநாசி, ஈரோடு, சேலம் வழியாக சதுரங்கப்பட்டிணத்தை அடைகிறது. மற்றொரு வழி, பேரூர், வெள்ளலுார், சூலுார், பல்லடம், கரூர், திருச்சி வழியாக பூம்புகார் சென்றது.மூன்றாவது வழி, ஆனைமலை, வடபூதநத்தம், கொழுமம், சின்னக்கலையமுத்துார், பழநி, திண்டுக்கல், மதுரை வழியாக ராமேஸ்வரம் வரை சென்றது. இந்த வழிகள் இன்றும் சிறந்து விளங்குகின்றன. புதிய கற்காலம், சோழர் காலம், போசனர் காலம், விஜய நகர காலம், நாயக்கர் காலம், வெள்ளையர் காலம் என பல கால கட்டங்களை பெற்றுள்ளது.காலந்தோறும் ஆட்சி மாறினாலும் மக்களின் வாழ்க்கை சலனமிற்றிருந்தது.
நன்னனுார் ஆனைமலை; பழங்காலத்தில் கொங்குநாடு, 25 நாடுகளாக பிரிக்கப்பட்டு இருந்தன. இதன் தென்பகுதியான ஆனைமலை நாடும் அவற்றுள் ஒன்றாகும். ஆனைமலை சங்க காலந்தொட்டு சிறந்து விளங்கும் புண்ணிய பூமியாகும். சங்ககாலத்தில் நன்னன் மன்னன் வாழ்ந்த பகுதியாகும். கல்வெட்டுகள் இவ்வூரை நன்னனுார் என்றே குறிப்பிடுகின்றன. இம்மலையில் யானைகள் அதிகம் இருந்ததால் இப்பெயர் பெற்றது. எட்டுத்தொகை நுால்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில், பல்யானச் செல்கெழு குட்டுவனை உம்பற்காட்டை தன் வயப்படுத்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த உம்பற்காடு இப்பகுதியாகும். ஆனைமலையின் அடிவாரத்தில் அமையப்பெற்ற ஊருக்கும் அதே பெயர் ஏற்பட்டது. சோழன் பூர்வட்டயம் என்ற நுாலில், ‘ஆனை இருளன் பதி’ என இவ்விடத்தை குறிப்பிட்டுள்ளனர். ஆனைமலை, ஆழியாறு ஆற்றங்கரையில் பழமை வாய்ந்த சோமேசுவரர் கோவிலும், ஊரின் நடுவே காசிவிஸ்வநாதர் கோவிலும் உள்ளன. ஆழியாறு ஆற்றின் கிளை நதியான உப்பாற்றகரையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோவில்.
மாசாணியம்மன் வரலாறு; இது சங்க காலத்தில் உம்பற் காடான ஆனைமலையில் நடந்த கதை. இந்த பகுதியை நன்னன் என்னும் ஓர் அரசன் ஆண்டு வந்தான்.ஆழியாற்றங்கரையில் இருந்த தன் அரச தோட்டத்தில், ஒரு மாமரத்தை வளர்த்து வந்தான். அந்த மரத்தின் கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ யாரும் பயன்படுத்தக்கூடாது என ஆணையிட்டு இருந்தான். ஆழியாற்றில் தன் ஒத்த இளவயது பெண்களோடு நீராட வந்த இளம்பெண் ஒருத்தி, அந்த மாமரத்தில் இருந்து தானாகவே ஆற்றில் உதிர்ந்து வந்த மாங்கனியை உண்டுவிட்டாள்.இது தெரிந்த மன்னன், அவளை கொலை செய்து விட உத்தரவிட்டான். அவளது தந்தை அந்த பெண்ணின் எடையளவு தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், 81 களிற்றையும் (ஆண் யானைகள்) அந்த பெண் அறியாது செய்த தவறுக்காக தண்டம் இழைப்பதாக கூறியும் ஏற்கவில்லை. அந்த பெண்ணை கொலை செய்து விட்டான். கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணை, மயானத்தில் சமாதிப்படுத்தினர். அங்கு, தெய்வீக சக்தி நிலவியதால், சமாதிப்படுத்திய இடத்தில், அந்த பெண் போன்ற ஓர் உருவத்தை மயான மண்ணில் அமைத்து வழிப்பட்டனர். மயானத்தில் சயனித்த நிலையில் இருந்த அப்பெண், நாளடைவில் மாசாணி என அழைக்கப்பட்டாள். பெண்ணை கொலை புரிந்த நன்னனை, கொங்கிளங்கோசர்கள் படையெடுத்து, அவனை கண்டித்து, காவல் மரமான மாமரத்தையும் வெட்டி சாய்த்தனர் என்பது பின்னால் நடந்த வரலாறாகும்.
மயான தேவதை; தமிழ்ப்புலவர்கள், பெண் கொலை புரிந்த அந்த நன்னர் மரபினைக்கூட, பிற்காலத்தில் பாட மறுத்துவிட்டனர். இதைப்பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘மண்ணிய சென்ற ஒண்ணுதல் அறிவை, புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு, ஒன்பதிந்து ஒன்பது களிற்றொடு அவள் நிறை பொன் செய் பானை கொடுப்பவும் கொள்ளான், பெண் கொலை புரிந்த நன்னன்,’ என, குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது. பெயர் தெரியாத இந்த பெண் பின்னாள் கொங்கு நாடு முழுவதும் வழிபடும் தெய்வம் ஆனாள். பக்தர்கள் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இங்கே வந்து மயான தேவதையை வழிபடுவது வழக்கமானது.
பரிகார வழிபாடு; தமிழர்களின் முதல் மாதமான தை மாதத்தில், தை பொங்கல் முடிந்த பின் அமாவாசை தொடங்கி அடுத்த, 17ம் நாள் நெருப்பினால் குண்டம் வளர்த்து அதில் நடந்து, அந்த பெண்ணுக்கு செய்த கொடுமைக்காக பக்தர்கள் பரிகாரம் தேடினர். ஆனைமலை ஊருக்கு மேல், ‘பிங்கொனாம் பாறை’ என்ற பெயருள்ள பாறை ஒன்று உள்ளது. இதுவே அந்த பெண்ணை கொன்ற பாறை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இவ்வூரில், கிறிஸ்துவுக்கு முந்தைய, 40 உரோமானியக்காசுகள் கிடைத்துள்ளன. ஆகவே, இந்த ஊர் நீண்ட வரலாறு உடையது என்பதில் ஐயமில்லை.
மாசாணியம்மன் கோவிலில் பக்தர்களுக்கான வசதிகள்
வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து நீண்ட துாரம் பயணம் செய்யும் பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் வாயிலாக, வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், பாலுாட்ட அறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை நடத்த குண்டம் நடைபெறும் இடத்தில் திருமண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு ராஜகோபுரத்தின் கிழக்குப்பகுதியில் ஒன்றும், அன்னதானக்கூடத்தில் இரண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, கோவிலுக்கு கிழபுறம் நவீன வசதிகளுடன் கூடிய (ஆண்கள் மற்றும் பெண்கள்) கழிவறைகள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று குளியல் அறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கை செலுத்துவதற்கான திருக்கோவிலுக்கு தெற்குப்புறம் முடிகாணிக்கை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அமர்ந்து படிக்கும் வகையில், நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது.