சபரிமலை; சபரிமலையில் மண்டல மகர விளக்கு சீசனில் போலீஸ் பாதுகாப்பு பணி ஏழு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 30 நாட்கள் கடந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட போலீசார் தங்கள் பணி முடிந்து நேற்று திரும்பினர். 4ம் கட்ட போலீசார் நேற்று பொறுப்பேற்றனர். சன்னிதானத்தில் 10 டி.எஸ்.பி. 36 இன்ஸ்பெக்டர், 105 எஸ். ஐ. 1375 போலீசார் வந்துள்ளனர். பெரிய நடை பந்தலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போலீசார் நடந்து கொள்ளவேண்டிய விதம் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. பக்தர்களுக்கு நல்ல தரிசனம் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்த இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும், அதை புரிந்து கொண்டு அனைத்து போலீசாரும் பணியாற்ற வேண்டும் என்றும், பக்தர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கு உதவுதல் போன்ற அனைத்து பணிகளையும் போலீசார் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டனர். பாண்டித்தாவளம் முதல் சபரி பீடம் வரை 10 பிரிவுகளாக போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பம்பை, நிலக்கலிலும் நேற்று நான்காம் கட்ட போலீசார் பொறுப்பேற்றனர்.