பதிவு செய்த நாள்
17
டிச
2024
11:12
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலின் மூலவர் ஆதிபுரீஸ்வரர், தங்க முலாம் பூசப்பட்ட நாக கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தையொட்டி, மூன்று நாட்கள் மட்டும் கவசம் திறக்கப்பட்டு, புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, 14ம் தேதி மாலை நவதீபங்கள் காணொளியில், நாக கவசம் திறக்கப்பட்டு புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் துவங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மற்றும் நேற்று முழுதும் ஆதிபுரீஸ்வரர் புற்று வடிவிலான லிங்க திருமேனியை கவசமின்றி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிறைவாக, நேற்றிரவு அர்த்தஜாம பூஜைக்கு பின், ஆதிபுரீஸ்வரருக்கு மீண்டும் கவசம் அணிவிக்கப்பட்டது. மூன்று நாட்களில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.