சபரிமலை பெருவழிப் பாதையில் அனுமதி நேரம் அதிகரிப்பு; 7 லட்சம் பேருக்கு அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2024 05:12
சபரிமலை; மகர விளக்கு காலத்தில் பெருவழிப்பாதையில் கூட்டம் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு பக்தர்களை அனுமதிக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எருமேலியிலிருந்து அழுதை வழியாக பம்பை வரும் பெருவழிப் பாதை சபரிமலைக்கான முக்கிய பாரம்பரிய பாதையாகும். முழுக்க முழுக்க அடர்ந்த காட்டுக்குள் ஒற்றையடி பாதையாக இது அமைந்துள்ளது. இங்கு பயணம் செய்யும் பக்தர்கள் நடு காடுகளுக்குள் சிக்கி விடக்கூடாது என்பதற்காக குறிப்பிட்ட இடங்களில் இருந்து பக்தர்கள் தொடர்ந்து செல்வதற்கான நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மகர விளக்கு காலத்தில் கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என்பதை கணக்கில் கொண்டு இடுக்கி மாவட்ட நிர்வாகம் பக்தர்களை அனுமதிக்கும் நேரத்தை அதிகரித்துள்ளது. இதன்படி முக்குழியில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கும் நேரம் காலை 7:00 முதல் மாலை 4:00 மணி வரை எனவும், அழுதையிலிருந்து அனுமதிக்கும் நேரம் காலை 7:00 முதல் மதியம் 3:30 வரை எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் புல் மேடு பாதையில் சத்திரத்திலிருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படும் நேரம் காலை 7:00 முதல் பகல் 1:00 மணி வரை என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சபரிமலை மாளிகைப்புறம் கோயிலின் பின்புறம் உள்ள அன்னதான மண்டபத்தில் இன்று வரை 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு கூறியுள்ளது. அன்னதான நன்கொடையாக மட்டும் 2.18 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பந்தளம், எருமேலி , நிலக்கல் கோயில்களில் இந்த ஆண்டு முதல் திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேரடியாக அரவணை அப்பம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த வகையில் மட்டும் தேவசம்போர்டுக்கு 2.32 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.