காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் அன்னக்கூட உற்சவம்
பதிவு செய்த நாள்
23
நவ 2026 02:11
சென்னை: திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு அன்னக்கூட உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் பவளவண்ணப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவர்த்தன மலையைத் தனது சுண்டு விரலில் தூக்கி நிற்கும் கிருஷ்ணர் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகவான் கிருஷ்ணர், கோகுலத்தில் வசித்த மக்கள் மழைக்காக இந்திரனை வழிபட்டு வந்த நிலையில், இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் வாழ்வாதாரமாக விளங்கும் கோவர்த்தன மலையை வழிபடுமாறு அறிவுறுத்தினார். இதனால் கோபமடைந்த இந்திரன் கோகுலத்தில் கடும் மழை, புயலை ஏற்படுத்தியதாக புராணங்கள் கூறுகின்றன. இதிலிருந்து மக்களையும் கால்நடைகளையும் காப்பாற்றுவதற்காக கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தனது சுண்டு விரலில் தூக்கி ஏழு நாட்கள் குடையாகப் பிடித்து அனைவருக்கும் அடைக்கலம் அளித்தார். பின்னர் இந்திரனின் ஆணவம் அடங்கியதாகவும் புராண வரலாறு தெரிவிக்கிறது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் கோவர்த்தன பூஜை மற்றும் அன்னக்கூட உற்சவம் கொண்டாடப்படுகிறது. இயற்கை, மலை, கால்நடைகள் மற்றும் உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நடைபெறும் இந்த உற்சவத்தில், பெருமாளுக்கு பல்வேறு வகையான உணவுகள் படைக்கப்பட்டு அன்னக்கூடமாக அலங்கரிக்கப்படுவது சிறப்பம்சமாகும். 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த உற்சவத்தில், பெருமாளுக்கு படைக்கப்பட்ட பல்வேறு வகையான சாதங்கள், சாம்பார் சாதம், புளியோதரை மற்றும் பலவகையான இனிப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவர்த்தன கிருஷ்ணரையும், பவளவண்ணப் பெருமாளையும் தரிசித்து, அன்னப் பிரசாதங்களைப் பெற்று மகிழ்ந்தனர். அன்னக்கூட உற்சவத்தில் பெருமாளை தரிசித்து வழிபட்டால் வாழ்வில் உணவுப் பஞ்சம் ஏற்படாது, குடும்பத்தில் செழிப்பும் மகிழ்ச்சியும் நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கோவர்த்தன மலையைத் தூக்கி மக்களைக் காத்த கிருஷ்ணரின் அருளைப் போற்றும் வகையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த அன்னக்கூட உற்சவம் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தி நிறைந்த நிகழ்வாக அமைந்தது.
|