பதிவு செய்த நாள்
31
டிச
2024
04:12
திருப்போரூர்; திருப்போரூரில், அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்த சுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில், சிறப்பு வழிபாடு நடக்கிறது. இது தவிர கந்த சஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன. செவ்வாய்க்கிழமை கந்த பெருமானுக்கு உகந்த நாள் என்பதால், அன்று கந்த பெருமானை தரிசிக்க, ஏராளமானோர் திருப்போரூரில் திரள்கின்றனர். அந்த வகையில் இன்று 2024ம் ஆண்டின் கடைசி செவ்வாய் மற்றும் கடைசி நாள் என்பதால், காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வர ஆரம்பித்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். மொட்டை அடித்தல், எடைக்கு எடை துலாபாரம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். வட்ட மண்டபத்தை 11, 108 முறை சுற்றியும், வட்டமண்டபத்தை சுற்றி அமர்ந்து விளக்கேற்றியும், கூட்டு வழிபாடு செய்தனர். இதன் காரணமாக, திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை, மாட வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.