பதிவு செய்த நாள்
07
ஜன
2025
11:01
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், வருகிற, 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி என்னும், சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகுண்ட ஏகாதசி வைபவ விழா, விமர்சியாக நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழாவின் தொடக்கமாக, திருமொழித் திருநாள் எனும், பகல் பத்து உற்சவம், டிச., மாதம், 31ம் தேதி துவங்கியது. தொடர்ந்து கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர், அரங்கநாதர் சுவாமி முன், தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தத்தில், குலசேகர பெருமாள் அருளிச் செய்த, பெருமாள் திருமொழி, திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த திரு நெடுந்தாண்டகம், திரு குறுந்தாண்டகம் மற்றும் பெரிய திருமொழி பாசுரங்கள் ஆகியவற்றை சேவித்து வருகின்றனர். ஒன்பதாம் தேதி இரவு, அரங்கநாத பெருமாள், நாச்சியார் திருக்கோலத்தில் மோகனா அவதாரத்தில் எழுந்தருள உள்ளார். அதைத் தொடர்ந்து, 10ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு வைகுண்ட ஏகாதசி என்னும், சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற உள்ளது. அன்று இரவு, 11:00 மணிக்கு ராப்பத்து உற்சவமான, திருவாய் மொழித் திருநாள் தொடங்க உள்ளது. 17ம் தேதி இரவு திருமங்கை மன்னன் வேடுப்பரியும், அரங்கநாத பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, உலா வரும் உற்சவமும் நடைபெற உள்ளது. 19ம் தேதி இரவு திருவாய் மொழித் திருநாள் சாற்று முறை நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன் மற்றும் செயல் அலுவலர் சந்திரமதி ஆகியோர் செய்து வருகின்றனர்.