பதிவு செய்த நாள்
09
ஜன
2025
11:01
சென்னை; ‘‘திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலுக்கு, ‘ரோப் கார்’ அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லாததால், ‘லிப்ட்’ வசதி ஏற்படுத்தப்படும்,’’ என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்: தி.மு.க., – இனிகோ இருதயராஜ்: மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலுக்கு ரோப் கார் வசதி செய்து தரப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக, நானும், அமைச்சர் சேகர்பாபுவும், 2023ம் ஆண்டு அங்கு ஆய்வு செய்தோம். மலைக்கோட்டையில் உள்ள 417 படிகளை, அமைச்சர் விறுவிறு என்று ஏறினார். நான் மெதுவாக ஏறினேன். எனக்காக ரோப் கார் வசதி செய்து தரப்படும் என சட்டசபையில் அமைச்சர் கூறினார். அங்கு ரோப் கார் அமைக்க சாத்தியமில்லை என்றால், லிப்ட் வசதியாவது ஏற்படுத்தி தர வேண்டும். அமைச்சர் சேகர்பாபு: உச்சி பிள்ளையார் கோவிலுக்கு ரோப் கார் அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் அரசுக்கு உள்ளது. இதற்காக, ‘இட்காட்’ என்ற நிறுவனம் வாயிலாக சாத்தியக்கூறு ஆய்வு செய்ய, இரண்டு முறை உத்தரவிடப்பட்டது. அந்நிறுவனம் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தது. மலையின் கீழ் மற்றும் மேல் பகுதியில் ரோப் கார் நிறுத்துவதற்கும், டிக்கெட் கவுன்டர், அலுவலகம் அமைப்பதற்கும் இடமில்லை என, அந்நிறுவனம் கூறி விட்டது. எனவே, லிப்ட் வசதி ஏற்படுத்தி தரப்படும். மலைக்கு சென்றபோது சிரமப்பட்டு ஏறியதாக, இனிகோ இருதயராஜ் கூறினார். இந்தாண்டு இறுதிக்குள் சுலபமாக அவர் தரிசனம் செய்யும் வாய்ப்பை உருவாக்கி தருவோம். இவ்வாறு விவாதம் நடந்தது.