பதிவு செய்த நாள்
10
ஜன
2025
07:01
திருச்சி: திருச்சி:ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசலைக் கடந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பூலோக வைகுண்டம் என்று சிறப்பித்து சொல்லப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது. இதில் மார்கழி மாதம் 20 நாட்கள் திருவத்யயன உற்சவம் என்ற வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நடக்கும். இந்த விழா நாலாயிர திவ்வியப்பிரபந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பகல் பத்து, இராப்பத்து என்று இரண்டு பகுதிகளாக நடத்தப்படுகிறது. பகல் பத்து நாட்களில் பெருமாள் முன் அரையர்கள் தீந்தமிழ் திருமொழிப் பாசுரங்களைப் அபிநயத்தோது பாடுவார்கள். இராபத்து துவக்க நாளின் அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக உற்சவர் ஆயிரங்கால் மண்டபம் வருவார். அங்கு 10 நாட்கள் திருவாய்மொழிப் பாசுரங்கள் பாடப்படும். கடந்த 30ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் விழா துவங்கியது. 31ம் தேதி முதல் உற்சவர் ஸ்ரீ நம்பெருமாள் தினமும் அதிகாலையில் புறப்பட்டு, கோயில் அர்ஜுன மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து திருமொழிப் பாசுரங்களைக் கேட்டு வருகிறார். பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று (9ம் தேதி) ஸ்ரீ நம்பெருமாள் மோகினி அலங்காரம் என்ற நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு இன்று நடைபெற்றது. இதற்காக இன்று அதிகாலை, 3.30 மணிக்கு ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட, பல்வேறு சிறப்பு ஆபரணங்கள் அணிந்து, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். பின் இரண்டாம் பிரகாரம் வலம் வந்து, நாழிகோட்டான் வாசல் வழியாக, மூன்றாம் பிரகாரத்துக்கு நம்பெருமாள் வந்தார். அங்கிருந்து துரைபிரதட்சணம் வழியாக, பரமபதவாசல் பகுதிக்கு வந்து, காலை சரியாக, 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு, அதன்வழியாக பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை நம்பெருமாள் கடந்து வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை தொட்டது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பரமபத வாசலைக் கடந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.