பதிவு செய்த நாள்
10
ஜன
2025
07:01
ஸ்ரீவில்லிபுத்தூர் ; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் "கோவிந்தா,கோபாலா"கோஷம் முழங்க பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியே ஸ்ரீஆண்டாள்-ஸ்ரீரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
108 திவ்ய தேசங்களில் முக்கிய திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை 7.05 மணிக்கு பரம்பத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. முன்னதாக அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பெரிய பெருமாள்,ஆண்டாள்,ரெங்கமன்னார் வேத விண்ணப்பமாகி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் காலை 7.05 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியே ஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருள ஆழ்வார்கள் எதிர்கொண்டு வரவேற்றனர்.பின்னர் மாடவீதி,கந்தாடை வீதி வழியாக ராப்பத்து மண்டபத்திற்கு ஆண்டாள் ரெங்கமன்னார், பெரிய பெருமாள் எழுந்தருளினர். அங்கு மங்களாசனம், திருவாய்மொழி துவக்கம், அரையர் அருளிப்பாடு, பெரிய பெருமாள் பக்தி உலாவுதல், அரையர் வியாக்கியானம், சேவா காலம் மற்றும் கோஷ்டி நடக்கிறது. பின்னர் மாலை 4 மணிக்கு ஆண்டாள் ரெங்கமன்னார் அங்கிருந்து புறப்பட்டு ஆஸ்தானம் செல்கின்றனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா செயல் அலுவலர் சக்கரையம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.