பதிவு செய்த நாள்
11
ஜன
2025
05:01
கும்பம்: அவிட்டம் 3, 4ம் பாதம்; திடமான சிந்தனையுடன் எடுத்த வேலைகளில் வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாக இருக்கும். செவ்வாய் வக்ரம் அடைந்துள்ள நிலையில் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் பல வழியிலும் செலவுகளை அதிகரிப்பார். அலைச்சலை ஏற்படுத்துவார். மனதில் ஏதேனும் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். உடல் ரீதியாகவும் சில சங்கடங்கள் ஏற்படும். என்றாலும், மாதத்தின் முதல், கடைசி வாரங்களில் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் சனி பகவான் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். வேகமாக செயல்பட வைப்பார். நினைத்த காரியங்களை நடத்தி வைப்பார். என்றாலும், நண்பர்களையும் குடும்பத்தினரையும் அனுசரித்துச் செல்வது நன்மையாக இருக்கும். செய்துவரும் தொழிலில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். ஒரு சிலர் மேலதிகாரிகளின் கண்டிப்பிற்கு ஆளாக வேண்டிவரும் என்பதால் பணியில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். 2 ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. யாரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது மிக மிக அவசியம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை கொள்வதுடன் ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.
சந்திராஷ்டமம்: ஜன. 19.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 18, 26, 27. பிப். 8, 9.
பரிகாரம்: நவகிரக வழிபாட்டால் நன்மை உண்டாகும்.
சதயம்: எந்த ஒன்றிலும் தனித்துவத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாக இருக்கும். ராகு பகவான் 2ம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வது அவசியம். எதிர்பார்த்த வரவு வரும். பழைய கடன்களை அடைத்து நிம்மதியடைவீர்கள். வேலையில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நன்மையாக இருக்கும். வியாபாரிகள், கணக்கு வழக்குகளில் கவனமாக இருப்பதும் அரசு முயற்சிகளில் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் வழங்கும் வேலைகளை மட்டும் செய்வதால் சங்கடங்கள் இல்லாமல் போகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் சனி பகவான் மனதிற்குள் ஏதேனும் ஒரு சங்கடத்தை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார். கையில் எடுத்த வேலையை முடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஒரு சிலருக்கு இருக்கும். அதே நேரத்தில் குடும்பத்திலும், நட்பு வட்டத்திலும் சின்னச் சின்ன பிரச்சனைகள் வந்து செல்லும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உடல் நிலையில் ஏதேனும் சங்கடத்தை ஏற்படுத்துவார். ஒரு சிலருக்கு எதிர்பார்ப்பில் ஏமாற்றத்தை உண்டாக்குவார். என்றாலும், புதன், சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வரவு தடையின்றி வரும். செலவுகளை சமாளிக்க முடியும். இடம் வாங்குவது விற்பது போன்ற வேலைகள் நடந்தேறும். பொன் பொருள் சேரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் நிதானமாக செயல்படுவதும், தலைமையை அனுசரித்துச் செல்வதும் நன்மையை உண்டாக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
சந்திராஷ்டமம்: ஜன. 19, 20.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 22, 26, 31. பிப். 4, 8.
பரிகாரம்: வராகியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்: எந்த ஒன்றையும் அறிவு பூர்வமாக சிந்தித்து, அதற்கேற்ப செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் உங்கள் வேலைகளில் அதிகபட்ச கவனம் வேண்டும். எந்த ஒன்றையும் யோசித்து செயல்படுவது நன்மையாகும். ஜென்ம ராசிக்குள் சனி, 2ல் ராகு, 8ல் கேது, 12ல் சூரியன் என்ற சஞ்சார நிலை உங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும், மாதம் முழுவதும் அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் எதிர்பார்த்த ஆதாயத்தை உங்களுக்கு வழங்குவார். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். எதிர்பார்த்த லாபம் வரும். எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியாகும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் நிதானமாக செயல்படுவது நன்மையாகும். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம். பிறரை நம்பி எந்ம வேலையிலும் இந்த மாதத்தில் ஈடுபட வேண்டாம் அதனால் எதிர்மறையான பலன்களே ஏற்படும். குடும்பத்தினரையும் நண்பர்களையும் அனுசரித்துச் செல்வது உங்கள் நெருக்கடிகளைக் குறைக்கும். சில நேரங்களில் எதையோ இழந்ததுபோல் மனம் தடுமாறும் என்றாலும் எல்லாவற்றையும் சமாளித்திடும் சக்தி உங்களுக்கு உண்டாகும். மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் முழுமையான அக்கறை எடுத்துக் கொள்வது நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: ஜன. 20, 21.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 26, 30. பிப். 3, 8, 12.
பரிகாரம்: ஐயப்பனை வழிபட சங்கடங்கள் விலகும்.