பதிவு செய்த நாள்
13
மார்
2026
10:03
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்
எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஏப். 1 வரை செவ்வாய் பாக்ய ஸ்தானத்திலும், அதன்பின் ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால், எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை. புதிய முதலீடுகளின் எச்சரிக்கை அவசியம். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்த ஒரு வேலையிலும் இக்காலத்தில் ஈடுபட வேண்டாம். நம்பிக்கையோடு நீங்கள் உறவாடியவர்கள் கூட அவர்களின் ஆதாயத்திற்காக உங்களுக்கு எதிரியாவார்கள். என்றாலும், உங்கள் ராசிநாதன் ஏப். 6 முதல் சாதகமாக சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலைகளை உங்களால் முடித்துக் கொள்ள முடியும். எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு பகவான் மாதத்தின் தொடக்கத்தில் வக்கிர நிவர்த்தி அடைவதால் பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். காதல் புரிந்து வருபவர்களுக்கு திருமணத்திற்குரிய வாய்ப்பு உருவாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வால் இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு வேலையின் காரணமாக குடும்பத்துடன் இடைவெளி, வெளியூர் வாசம் ஏற்படும். நம்பிச்சென்று உதவி கேட்கும் இடத்தில் கேட்டது கிடைக்கும். பெரிய மனிதர் ஆதரவும் தெய்வ அருளும் இந்த நேரத்தில் உங்களைப் பாதுகாக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மாணவர்களுக்கு உயர் கல்விக்குரிய வாய்ப்புகள் உருவாகும்.
சந்திராஷ்டமம்: ஏப். 10, 11.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 23, 27. ஏப். 5, 9.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
எந்த ஒன்றையும் தன்னுடைய சுய முயற்சியால் அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். இதுவரை உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து யோகப்பலன்களை வழங்கி வந்த சனி பகவான், ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்து வரும் தொழிலில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். வேலையிலும் மேல் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படும். ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபட வேண்டிய கட்டாயம் உண்டாகும். மனமும் உடலும் சங்கடத்திற்கு ஆளாகும் என்றாலும், உங்கள் சகாய ஸ்தானாதபதி சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானத்திற்கு குறைவிருக்காது. வரவேண்டிய பணம் வரும். அரசுவழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நடக்க வேண்டிய வேலைகள் நடக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பும் கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். யோகக்காரகன் ராகு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். முயற்சிக்கு ஏற்ற ஆதாயம் உண்டாகும். முடங்கிக் கிடந்த தொழில் மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும். உறவினருடன் ஏற்பட்ட பகை விலகும். குரு பகவானின் பார்வைகளால் நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விஐபிகள் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைப்பார்க்கும் இடத்திலும், புதியவர்களிடமும் குடும்ப ரகசியங்களையோ, கணவன் மனைவிக்குள்ளான பிரச்னைகளையோ பேசாமல் இருப்பது நன்மையாகும். பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். குரு பகவானின் பார்வை சாதகமாக இருப்பதால் மாணவர்களின் உயர் கல்வி கனவு நனவாகும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 15, ஏப். 11, 12.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 22, 23, 31. ஏப். 4, 5, 13.
பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்
பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் ராசிக்குள் சஞ்சரித்துவரும் மங்களக்காரகன் குருபகவான் ஏப். 17 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் உழைப்பு அதிகரிக்கும் என்றாலும், இக்காலத்தில் உங்கள் நீண்டநாள் கனவுகள் நனவாகும். பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தையும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் இடத்தையும், பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தையும் குருபகவான் பார்ப்பதால், ஜென்ம குருவின் பார்வைகள் உங்களுக்கு நன்மைகளை உண்டாக்கும். இதுவரை குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் எல்லாம் விலகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களின் ஏக்கம் தீரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் கூடும். விலகிச்சென்ற நண்பர்கள் மீண்டும் தேடிவருவர். பெரியோரின் உதவியும் ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு இடமாற்றம், பதவி உயர்வு என்று ஏற்பட்டு குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டிய நிலையும் ஏற்படும். என்றாலும் மாதம் முழுவதும் சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், சகாய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். விரும்பிய இடத்திற்கு மீண்டும் மாற்றம் கிடைக்கும். அரசாங்க வழியில் தடைபட்டிருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான காலமாக இருக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் நிம்மதியும், நவீன பொருட்களின் சேர்க்கையும் இருக்கும். பெண்கள் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பொன் பொருள் சேரும். மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 16, ஏப். 12.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 21, 23, 30. ஏப். 3, 5.
பரிகாரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட வாழ்வில் நலமும் வளமும் உண்டாகும்.