பதிவு செய்த நாள்
16
ஜன
2025
12:01
திருச்சி; திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தத்தில், ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று முருகன் ஞானரத ஊர்வலம் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று புத்தாநத்தத்தில் ஞானரத ஊர்வலத்துக்கு, ஹிந்து அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. இதையடுத்து, நேற்று மதியம் பாறைப்பட்டி மாலைக்காட்டுப்பட்டி சந்திப்பில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகன் சிலை வைத்து, ஞானரத ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை வி.ஹெச்.பி., மாநில நிர்வாகி என்.ஆர்.என்.பாண்டியன் துவக்கி வைத்தார். தாரை, தப்பட்டைகள் முழங்க, புத்தாநத்தம் கடைவீதி உட்பட, முக்கிய வீதிகள் வழியாக சென்று, இடையப்பட்டி வழியாக வடக்கு இடையப்பட்டியில் உள்ள ஞானமலையை சென்றடைந்தது. அங்கு ஞானவேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதில், ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக, மத்திய மண்டல ஐ.ஜி., நிர்மல்குமார் ஜோஷி தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.