கோவில்பாளையம்; காலகாலேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. பேரூராதீனத்தில், 24ம் பட்டமாக திகழ்ந்த, சாந்தலிங்க ராமசாமி அடிகளின் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக,100 இடங்களில் திருவாசகம் வாசிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 50வது நிகழ்வாக, கோவில்பாளையம், கால காலேஸ்வரர் கோவிலில், திருவாசகம் முற்றோதல் நேற்று முன்தினம் நடந்தது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் தலைமை வகித்து பேசுகையில், சாந்தலிங்க இராமசாமி அடிகள் சைவ சமயத்தையும், தமிழையும், இரு கண்களாக போற்றினார். திருவாசகம் பாடினால் சிவபெருமானை முழுமையாக உணர முடியும். திருவாசகத்தின் பெருமை குறித்து, இளைய தலைமுறைக்கு நாம் தெரிவிக்க வேண்டும், என்றார். கோவை மாவட்டத்தின், பல பகுதிகளில் இருந்து, 200 சிவனடியார்கள் பங்கேற்றனர். இசையுடன் திருவாசகத்தின் 51 பதிகங்களையும் முழுமையாக பாடி சிவானந்த அனுபவம் பெற்றனர். நிகழ்ச்சியில், சிவனடியார்கள் ரவி, தங்கராஜ், ரத்தினசாமி, மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.