திருக்கோஷ்டியூர் தங்க விமானத் திருப்பணி மீண்டும் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2025 05:01
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் அறநிலையத்துறை துணை ஆணையர் விடுப்பால் தடைப்பட்ட மூலவர் அஷ்டாங்க விமானத்தின் தங்கத் திருப்பணி பொறுப்பு அலுவலர் நியமனத்தால் மீண்டும் துவங்கியது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வரலாறு,புராணச் சிறப்பு மிக்க அஷ்டாங்க விமானம் புகழ் பெற்றது. இந்த மூலவர் விமானத்திற்கு தங்கத் தகடு திருப்பணியை முன்னிட்டு கடந்த நவ. 14 ல் தங்கத் தகடு ஓட்டும் பணி துவங்கியது. விமானத்தின் மூன்று நிலைகளில் முதல்நிலைக்கு தங்கத் தகடு ஒட்டுவதற்கான பணி துவங்கியது. விமானத்திற்கு செப்புக் கவசம் தயாரிக்கப்பட்டு அதற்கான நகாசு வேலைகள் நடந்து வருகிறது. அதில் ஒட்டுவதற்கு தங்கத்தகடு தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடந்து வந்தது. இப்பணிகள் அறநிலையத்துறை மண்டல துணை ஆணையர் அலுவலக துணை ஆணையர் கண்காணிப்பில் கோயில் வளாகத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் துணை ஆணையர் நீண்ட மருத்துவ விடுப்பில் சென்றதால் தங்கத் தகடு திருப்பணி தடைபட்டது. திருப்பணி பாதிக்காமலிருக்க மாற்று பணியில் துணை ஆணையர் நியமிக்க திருப்பணிக் குழுவினர் கோரினர். இதனையடுத்து அறநிலையத்துறை ராமனாதபுரம் துணை ஆணையரும், நகை சரிபார்ப்பு துணை ஆணையருமான ஞானசேகரன் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து கோயில் வளாகத்தில் தங்கத் தகடு பணிகள் மீண்டும் துவங்கியது. திருப்பணிக்குழு தலைவர் ராஜ்மோகன் கூறுகையில், அலுவலர் நியமனத்திற்கு அரசுக்கு நன்றி. திருப்பணி ஆறு மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் நடைபெறும் தங்க விமானத்திற்கான பணிகளை பக்தர்கள் பார்வையிடலாம். திருப்பணியிலும் பங்கேற்கலாம் என்றார்.