பந்தலுார்; பந்தலுாரில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை குழுவினர் புறப்பட்டனர். மாநிலம் முழுவதும் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்வதற்கு, மயில்வாகனம் பழனி பாதயாத்திரை குழு கடந்த, 33 ஆண்டுகளாக ஏற்பாடு செய்து வருகிறது. அதில், ஒவ்வொரு பகுதியில் இருந்தும் விரதமிருக்கும் பக்தர்கள், கோவைக்கு சென்று அங்கிருந்து ஒன்றாக பழனிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். அதில், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்தனர். இன்று காலை, பந்தலுார் மாரியம்மன் கோவிலில் குருசாமிகள் ரெங்கசாமி, சந்திரன் ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து புறப்பட்டனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்களை உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் வழி அனுப்பி வைத்தனர்.